EBM News Tamil
Leading News Portal in Tamil

தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனை அனைவருக்கும் இலவசமாக செய்யவேண்டியதில்லை – உச்ச நீதிமன்றம்

கொரோனா பரிசோதனை எல்லாருக்கும் இலவசமாக செய்யவேண்டியத் தேவையில்லை. ஏழைகளுக்கு மட்டும் இலவசமாக செய்தால் போதும் என்று உச்ச நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து சோதனை செய்வதற்கு தற்போதுவரை 157 அரசு ஆய்வகங்களில் சோதனை செய்யப்படுகிறது. அதேபோல, 67 தனியார் ஆய்வகங்களுக்கு கொரோனா சோதனை செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கொரோனா சோதனைக்கான கட்டணமாக 4,500 ரூபாயை மத்திய அரசு நியமித்தது. தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா சோதனையை இலவசமாக செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனியார் ஆய்வகங்களிலும் அனைவருக்கும் கொரோனா சோதனை இலவசமாக செய்யவேண்டும் என்று ஏப்ரல் 8-ம் தேதி உத்தரவிடப்பட்டது.

அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசின் ஆயுஸ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் வருபவர்களுக்கு மட்டும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா சோதனை செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், வேறு எந்த வகையிலான பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தால் அவர்களும் இலவசமாக கொரோனா சோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளது.