EBM News Tamil
Leading News Portal in Tamil

கொரோனாவைக் கட்டுப்படுத்த மே-3 வரை ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு

கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே-3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். கொரோனா பாதிப்பு குறித்த பிரதமர் மோடி நான்காவது உரை இதுவாகும். இன்று பேசிய அவர், ‘கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பகுதிகளில் ஏப்ரல் 20-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும். கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும். தற்போதுள்ள கட்டுப்பாடுகளை மே-3ம் தேதி வரை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அடுத்த ஒருவார காலம் முக்கியமானது. ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவின் நிலை குறித்து ஆராயப்படும். ஏற்கெனவே ஒரு லட்சம் படுக்கைகள் தயாராக உள்ளன. ஊரடங்கு உத்தரவு தொடர்பான வழிபாட்டு நெறிமுறைகள் நாளை அறிவிக்கப்படும். கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் இடங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். நாடு முழுவதும் 600 மருத்துவமனைகள் கொரோனாவுக்காக சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த மருத்துவ வசதிகள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டுவருகிறது. இளம் ஆய்வாளர்கள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.