இந்தியாவில் கொரோனா: 24 மணி நேரத்தில் 31 உயிரிழப்பு… 10 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு
இந்தியாவில் கொரோனாவால் 24 மணிநேரத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 152-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக உயர்ந்துள்ளது. 24 மணிநேரத்தில் புதிதாக 918 பேருக்கு நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 152-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்கள் அடிப்படையில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் ஆயிரத்து 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் முதல்முறையாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.
ராஜஸ்தானில் 700 பேர், மத்தியப்பிரதேசத்தில் 564 பேர், தெலங்கானாவில் 504 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா, ஜப்பான், கொரியா நாடுகளில் கடந்த சில நாட்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், தற்போது பின்பற்றப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் சமூக இடைவெளியை தொடர வேண்டியது அவசியம் என்று சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கொரோனா சிகிச்சைக்கு 601 மருத்துவமனைகளில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் படுக்கைகள் தயார்நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவீதத்தினருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதாகவும் அகர்வால் தெரிவித்தார்.