நாளை காலை பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் – ஊரடங்கு நீட்டிப்பு அறிவிக்க வாய்ப்பு
பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு குறித்து பிரதமர் மோடி பேசுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமர் மோடி கடந்த மாதம் 24-ம் தேதி இரவு நாடு முழுவதும் ஊரடங்கு நிலையை அமல்படுத்தினார். இந்த ஊரடங்கு நாளை இரவுடன் முடிவுக்கு வருகிறது.
எனினும், கொரோனா தொற்று நிலை கருதி பஞ்சாப், ஒடிசா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்காளம் ஆகிய பல மாநிலங்கள் இம்மாத இறுதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளன. பிரதமரின் அறிவிப்பை அமல்படுத்துவோம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இந்த நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக பிரதமர் மோடி ஏற்கனவே, அனைத்து மாநில முதல்வர்கள், கட்சிகளின் பிரதிநிதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.
இந்த நிலையில், நேற்று அல்லது இன்று பிரதமர் மோடி ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை காலை 10 மணிக்கு, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது.