EBM News Tamil
Leading News Portal in Tamil

சில விலக்குகளுடன் ஊரடங்கை நீட்டிக்க முடிவு – பிரதமர் மோடி அறிவிப்பார் என்று தகவல்

நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 21 நாள் ஊரடங்கு வருகிற 14-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கை மேலும் நீட்டிக்குமாறு சில மாநில அரசுகள் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர். பஞ்சாப் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே, ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கும் என்று அறிவித்துள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் மாநில முதல்வர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.

நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவது பற்றியும், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர்களுடன் மோடி ஆலோசித்தார்.

இதில் முதல்வர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில், முடக்கத்தை நீட்டிப்பது பற்றிய இறுதி முடிவை நாளையோ, நாளை மறுதினமோ மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 14-ம் தேதி முதல் ஒட்டுமொத்தமாக ஊரடங்கை நீக்கிவிட முடியாது என பிரதமர் மோடி ஏற்கனவே கூறி இருப்பதால், ஒரு சில பகுதிகளில் அல்லது குறிப்பிட்ட சில மணி நேரம் ஊரடங்கு நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

கூட்டத்திற்குப் பின்னர் ட்வீட் செய்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடி ஊரடங்கை நீட்டிக்க சரியான முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில விலக்குகள் அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.