50 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளப்படுவார்கள் – ஐ.நா கணிப்பு..!
மனித இழப்பு மற்றும் பொருளாதார சரிவு குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு அறிக்கையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வு அறிக்கையை லண்டனின் கிங்ஸ் கல்லூரி மற்றும் ஆஸ்திரேலியாவின் தேசிய பல்கலைகழக பொருளாதார நிபுணர்கள் எழுதியுள்ளனர்.
அதில், கடந்த 30 ஆண்டுகள் உலக அளவில் இத்தனை பேர் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்படுவது இது முதல் முறை எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் உலக அளவில் சுமார் 60 கோடி மக்கள் ஏழைகளாகும் நிலை ஏற்படும் என்றும், இதனால் 2030- ம் ஆண்டுக்குள் வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் இலக்கை எட்ட முடியாத நிலை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வளரும் நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதும் , ஏழை மக்களுக்கு சமூக பாதுகாப்பு அளிப்பதையும் உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது
கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழியும் நேரத்தில் உலகின் மொத்த மக்கள் தொகையில் பாதி பேர் ஏழைகளாக மாறியிருப்பார்கள் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 40 சதவிகிதம் பேர் கிழக்கு ஆசியாவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.