ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர்கள் குழு முதல்வருக்கு பரிந்துரை!
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனைக்கு பின் மருத்துவ நிபுணர்கள் குழு சார்பில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் மருத்துவர் பிரதீப் கவுர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழக முதல்வருடன் 2 மணி நேரம் ஆலோசனை நடைப்பெற்றதாகவும், இதில் 17 மருத்துவ குழு நிபுணர்கள் தங்கள் கருத்தை தெரிவித்தார்கள் என்றும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசின் செயல்பாடுகளை அனைவரையும் பாராட்டினர் என்றும் கூறினார்.
மேலும், தமிழகத்தில் பொது சுகாதார அமைப்பு நல்ல முறையில் செயல்படுவதாக கூறிய அவர், அதனை இன்னும் பலப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் படுக்கை வசதிகள் சிறப்பாக இருப்பதாகவும், அதுக்குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்றும்,அதேப்போல் மருத்துவர்கள் , செவிலியர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பாதுகாப்பு உடைகள், உபகரணங்கள் ஆகியவற்றிற்கு சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் 144 தடை உத்தரவை மேலும் 14 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு பரிந்துரை செய்யப்பட்டதாகவும், ஆனால் நீட்டிக்கப்படும் 14 நாட்களில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் குடும்பத்தினர் என பலரையும் சோதனை செய்ய வேண்டும் என்றும், அந்த சோதனைகள் வைத்து தான் 14 நாட்களுக்கு பின் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.