EBM News Tamil
Leading News Portal in Tamil

200 விமானங்கள், 100 புல்லட் ரயில்கள் தயார்… சுதந்திர காற்றை சுவாசித்த 1.11 கோடி மக்கள்… இயல்பு நிலைக்கு திரும்பிய ஊஹான்…!

சீனாவின் ஹூபே மாகாணத்திலிருக்கும் ஊஹான் நகரில், கொரோனா பாதிப்பு முதல்முதலாகக் கடந்த ஜனவரி 10-ம் தேதி கண்டறியப்பட்டது. அங்கிருந்த கடல் உணவு விற்கும் சந்தைப் பகுதியில் பணிபுரிந்த 61 வயதான முதியவரின் இறப்புக்குப் பின்னரே இந்த வைரஸ் பரவல் உறுதிசெய்யப்பட்டது. தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லாத நிலையில் என்ன நடக்கிறது என்று புரிவதற்கு முன்னரே மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தனர். கொரோனா தாக்கத்தினால் சீனாவில் தற்போது வரை 3 ஆயிரத்து 333 பேர் உயிரிழந்தனர் அதில் 2 ஆயிரத்து 571 பேர் ஊஹானைச் சேர்ந்தவர்கள்.

இதையடுத்து, வைரஸ் பரவுவதைத் தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. அதன்படி ஜனவரி 23-ம் தேதி ஊஹான் நகரம் முழுவதும் முடக்கப்பட்டது. போக்குவரத்து, கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள் என அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டன. அங்குள்ள 1 கோடியே 11 லட்சம் மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர். சீனாவின் பிற பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் ஊஹான் நகரத்துக்கு வரவழைக்கப்பட்டனர்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரே வாரத்தில் 16 மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன. இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் மூலம் வைரஸ் பரவலை பெருமளவில் கட்டுப்படுத்தியது சீன அரசு.

அரசின் கெடுபிடிகளாலும், மக்களின் ஒத்துழைப்பாலும் கடந்த மூன்று வாரங்களில் ஊஹானில் மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒரு வார காலமாக உயிரிழப்புகளும் ஏற்படவில்லை,

இந்த நிலையில், 76 நாள்களுக்குப் பின் ஊஹானில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட, மக்கள் சுதந்திர காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியுள்ளனர்.