தூய்மைப் பணியாளர்கள் காலில் விழுந்து வணங்கி உதவிய விஜய் ரசிகர்கள்!
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் இந்த இக்கட்டான நேரத்திலும் மக்களுக்கு கொரோனா பரவாமல் இருக்க தங்களது உயிரை பணயம் வைத்து பணிபுரிந்து வருபவர்களில் தூய்மைப் பணியாளர்கள் முக்கியமானவர்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிப்பது, குப்பைகளை அகற்றுவது, கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்வது என மும்முரமாக தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களை கௌரவிக்கும் விதமாக மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் சார்பில் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்து அவர்களின் காலில் விழுந்து வணங்கி, பின்னர் அவர்களுக்கு பண மாலை, பூ மாலை, சால்வை அணிவித்து 10 கிலோ அரிசி, பருப்பு சமையல் எண்ணெய், காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட 18 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினர்.மேலும் முக கவசம், கையுறை கிருமி நாசினி, உள்ளிட்ட பொருட்கள் வழங்கிய விஜய் ரசிகர்கள் தூய்மைப் பணியாளர்களுக்கு மதிய உணவாக பிரியாணியும் வழங்கினர்.