ஆஹா.. நம்ம மக்களிடம் இப்படி ஒரு மாற்றமா.. தூய்மை பணியாளரை நெகிழ வைத்த பல்லடம் பெண்கள்
திருப்பூர்: உலகமெங்கும் கொரோனா வைரஸ் பிரச்சினை வேகமாக பரவி வரும் நிலையில், மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர் போன்றோரின் சேவை அளப்பரியது. இது அனைவராலும் அங்கீகரிக்கப்படுகிறது.
ஆனால், தூய்மைப் பணியாளர்களின் பணி என்பது பலரும் கண்டுகொள்ளப்படாதது. அவர்களும் மிக ஆபத்தான ஒரு பணி சூழ்நிலையில்தான் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். யார் வீட்டில் எந்த பிரச்சனை இருக்குமோ தெரியாது, ஆனால் அவர்கள் வீட்டில் இருந்து வரக்கூடிய குப்பைகளையும் இவர்கள் சேகரித்து அப்புறப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
நமது நாட்டில் இவர்களுக்கு உரிய வகையிலான பாதுகாப்பு உபகரணங்களும் கிடையாது என்பது அறிந்ததுதான். அப்படி இருந்தும் கருமமே கண் என்ற அடிப்படையில் இவர்கள் பணி தொடர்கிறது.
ஆனால் இதை அங்கீகரிக்கும் வகையில், மேலும் கவுரவப்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்துள்ளது. அங்கு ஒரு பெண்மணி, பல்லடம் நகராட்சியில் பணியாற்றும், பெண் தூய்மை பணியாளர் ஒருவருக்கு பாதபூஜை செய்து.. அதாவது கால்களை கழுவி அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு பூக்களைத் தூவி வழிபட்ட பிறகு, அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் காட்சி வீடியோவாக வெளியாகி உள்ளது.