அடிச்சு அடிச்சு சலுச்சு போச்சு… மரண பயத்தை காட்டுனாதான் சரியா இருக்கும்… நடுங்க வைக்கும் போலீஸ்
வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை தடுப்பதற்காக, மரண பயத்தை காட்டும் புது டெக்னிக் ஒன்றை காவல் துறையினர் கையில் எடுத்துள்ளனர்.
கண்ணுக்கே தெரியாத கோவிட்-19 வைரஸ் தற்போது உலகையே ஆட்டி படைத்து வருகிறது. கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை நெருங்கி வருகிறது. அதே சமயம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி கொண்டுள்ளது. கோவிட்-19 வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் முடக்கி போட்டுள்ளது.
சீனா, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஈரான் போன்ற நாடுகள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. இதனால் உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவிலும் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், அத்தியாவசிய பணிகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியே வர வேண்டும். ஆனால் பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்கள் இயங்காமல் சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதால், ஒரு சில வாகன ஓட்டிகள் ஜாலியாக ஊர் சுற்றி வருகின்றனர். இத்தகைய வாகன ஓட்டிகளால் கோவிட்-19 வைரஸ் பரவும் அபாயம் இருக்கிறது.
இதனால் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் தேவையே இல்லாமல் ஊர் சுற்றும் நபர்களுக்கு எதிராக காவல் துறை தற்போது கடும் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சமயத்தில், வாகன ஓட்டிகளை காவல் துறையினர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், வாகன ஓட்டிகளை தாக்குவதை போலீசார் நிறுத்தி கொண்டனர்.