Ultimate magazine theme for WordPress.

எதிர்ப்பு அறிக்கை… மன்னிப்பு கோர மறுத்த கே.பி.ராமலிங்கம்… கட்சியை விட்டு கட்டம் கட்டிய ஸ்டாலின்

சென்னை: திமுகவிலிருந்து அக்கட்சியின் முன்னாள் விவசாய அணி செயலாளரான கே.பி.ராமலிங்கம் அதிரடியாக இன்று நீக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கே.பி.ராமலிங்கம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க காணொலி மூலம் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், அதற்கு எதிரான நிலைப்பாட்டை ராமலிங்கம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கே.பி.ராமலிங்கம் திமுகவில் விவசாய அணி மாநிலச் செயலாளராக இருந்தவர். கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் தென்னை விவசாயிகள் நல வாரியத் தலைவராகவும், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். தொடக்கம் முதலே மு.க.அழகிரியின் ஆதரவாளராக இருந்து வந்த ராமலிங்கம், அழகிரி மீதான கட்சி நடவடிக்கைகளுக்கு பிறகு சற்று அடங்கி ஒடுங்கி நடக்கத் தொடங்கினார். அதற்கு முன்னர் வரை ஆரவாரமாக அழகிரி புராணத்தை பாடி அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்துவார். இவரிடம் இருந்த கட்சிப் பதவியை இரண்டு நாட்களுக்கு முன்பு பறித்த ஸ்டாலின், இன்று கட்சியை விட்டே அதிரடியாக நீக்கிவிட்டார்.

மு.க.அழகிரியை திமுகவில் இருந்து நீக்கியவுடன் அவருக்காக கருணாநிதியிடம் பரிந்து பேசச் சென்று வாங்கிக் கட்டிக்கொண்டு வெளியே வந்தவர் கே.பி.ராமலிங்கம். ஆரம்பத்தில் மு.க.ஸ்டாலினுடன் கருத்து வேறுபாட்டுடன் இருந்த இவர், கால ஒட்டத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றி ஒத்த கருத்துடைய கட்சி நீரோட்டத்தில் ஐக்கியமானார். இந்நிலையில் அவரது நடவடிக்கைகளில் மீண்டும் மாற்றம் தென்படத் தொடங்கியது. காரணம் மீண்டும் மாநிலங்களவை சீட் எதிர்பார்த்த ராமலிங்கத்துக்கு ஸ்டாலின் சீட் கொடுக்காததால் மீண்டும் முரண்டு பிடிக்கத் தொடங்கினார் ராமலிங்கம்.

Leave A Reply

Your email address will not be published.