EBM News Tamil
Leading News Portal in Tamil

கருணாநிதி உணர்ச்சிவசப்பட்ட தருணங்கள்

எதையும் தாங்கும் இதயம் என்ற அறிஞர் அண்ணாவின் வார்த்தைகளை நெஞ்சில் சுமந்து, அவ்வாறே இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் திமுக தலைவர் கருணாநிதி.
அரசியலில், கட்சியில், சமூக வாழ்வில், பொதுவாழ்வில் எத்தனை இன்னல்கள், இடர்கள் வந்தபோதிலும் அண்ணாவின் வார்த்தைகளை மற்றவர்களுக்கு உதாரணமாகக் காட்டி அதன்படி வாழ்ந்து காட்டியவர் திமுக தலைவர் கருணாநிதி. ஆனால், எதையும் தாங்கும் இரும்பு இதயத்தையும் சில சம்பவங்கள் உலுக்கிப்பார்த்து, உருக்கிப் பார்த்திருக்கின்றன.
அவற்றுள் சிலவற்றைக் காணலாம்.

* திராவிட இயக்கத்தில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாதவர், திமுகவை கட்டமைத்தவர்களில் ஒருவர், கருணாநிதியின் உற்ற தோழரான நாவலர் நெடுஞ்செழியனின் மரணம் கருணாநிதியின் இதயத்தைக் கலங்க வைத்ததுவிட்டது.
நாவலர் நெடுஞ்செழியன் இறந்தபோது, திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் இல்லை. வெளியூர் எங்கோ சென்றுவிட்டு சென்னை விமானநிலையம் வந்து இறங்கி வெளியேறுகிறார் கருணாநிதி. அப்போது, ஊடக்கதினர் திமுக தலைவர் கருணாநிதியை மறித்து, நாவலர் நெடுஞ்செழியின் மறைவு குறித்து கருத்துகளைக் கேட்டனர்.
தான் பேசினால் அழுதுவிடுவேன், தொண்டர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் என்று உத்வேகம் அளித்துவிட்டுத் தான் கண்ணீர் சிந்திவிடக்கூடாது என்பதற்காக, கருணாநிதி நிருபர் ஒருவரிடமிருந்து நோட்டு ஒன்றைப் பெற்றார். ஒரு அறையில் நெடுஞ்செழியின் குறித்த இரங்கல் அறிக்கையை எழுதிக்கொடுத்துவிட்டு அங்கிருந்து கண்ணீருடன் விடைபெற்று நெடுஞ்செழியின் இல்லத்துக்குச் சென்றார்.
* 2001-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் இருக்கிறார். மேம்பால ஊழல் வழக்கில் ஜூலை 4-ம் தேதி நள்ளிரவில் திமுக தலைவர் கைது செய்யப்பட்ட தருணம் குறித்து நிருபர்களிடம் விளக்கிக் கூறியபோது, அவர் தன்னை அறியாமல் அழுத தருணம் வேதனைக்குரியது.
கடந்த 2001-ம் ஆண்டு, ஜூலை 4-ம் தேதி நள்ளிரவு திமுக தலைவர் மைலாப்பூர் ஆலிவர் சாலையில் உள்ள ராஜாத்தி அம்மாள் இல்லத்தில் இருந்தார். அப்போது, அங்கு வந்த சிபி சிஐடி டிஐஜி முகமது அலி தலைமையில் வந்த போலீஸார் மேம்பால ஊழல் வழக்கில் உங்களைக் கைது செய்யப்போகிறோம் என்று கருணாநிதியை அழைத்தனர்.
கருணாநிதி அடிக்கடி கூறும் தனது மனசாட்சியான முரசொலி மாறனுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துவிட்டு வருகிறேன் என்று போலீஸாரிடம் தெரிவித்தார். ஆனால், போலீஸார் வயதானவர் என்றும் பார்க்காமல், முதல்மாடியில் இருந்து கீழே இழுத்துவந்தனர். சிறிது பொறுங்கள் எனது உள்ளாடையை அணிந்து விட்டுவருகிறேன் என்று கருணாநிதி கூறியும் போலீஸார் காதில் வாங்காமல் இழுத்து வந்தனர்.
இந்தச் சம்பவத்துக்கு பின் அவர் மேம்பால ஊழல் வழக்கில் 5 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு வெளியேவந்தார். அப்போது, தன்னை போலீஸார் எப்படி கைது செய்தார்கள் என்பதைக் கருணாநிதி விளக்கினார். அப்போது என்னுடைய உள்ளாடையை அணியக்கூட போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர், என்னைச் சுற்றி பெண் போலீஸார் இருந்தபோது எனக்கு வேதனையாக இருந்தது என்று கூறி உடைந்து அழுதுவிட்டார். அந்தச்சம்பவம் காண்போரைக் கண்கலங்க வைத்த தருணம்
* மேம்பால ஊழல் வழக்கில் கடந்த 2001-ம் ஆண்டு, ஜூன் 30-ம் தேதி கருணாநிதியை கைது செய்த போலீஸார், கீழ்பாக்கத்தில் செசன்ஸ் நீதிபதியிடம் ஆஜராக அழைத்து வந்திருந்தனர். அப்போது, நிருபர்கள் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பியபோது, பதில் சொல்லமுடியாமல் நா தழுதழுத்த கருணாநிதி, அறம் வெல்லும் என்று நிருபரிடம் நோட்டில் எழுதிக்கொடுத்துவிட்டு தரையில் அமர்ந்துவிட்டார்.
நீதிபதிகள் அவரை மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியும் கருணாநிதியை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லவில்லை.
* தனது மனசாட்சி என்று எப்போதும் அழைக்கும் முரசொலி மாறன் மறைவு செய்தி கேட்டு திமுக தலைவர் கருணாநிதி உடைந்து அழுதார். அடுத்ததாக, தனது சக தோழரும், மூத்த அமைச்சருமான சேலம் வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுச் செய்தி கேட்டு மனம் உடைந்து கருணாநிதி அழுதார்.
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற வார்த்தைகளை தொண்டர்களிடம் அடிக்கடி கூறும் திமுக தலைவர் கருணாநிதியின் தன்னுடைய இறப்பையும் தாங்கிக்கொள்ளுங்கள் என்று உடன்பிறப்புகளிடம் இருந்து விடைபெற்றுவிட்டார்.