EBM News Tamil
Leading News Portal in Tamil

கேரளாவில் மந்திரவாதி உள்பட 4 பேர் கொலையில் புதிய திருப்பம்: கைதான உதவியாளர் போலீஸிடம் வாக்குமூலம்

கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் மந்திரவாதி உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் 4 பேர் கொல்லப்பட்ட வழக்கில் புதிய திருப்பமாக அவரிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இது குறித்து விவரம் வருமாறு:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், வனப்புரத்தைச் சேர்ந்தவர் கன்னத் கிருஷ்ணன்(வயது52). இவர் மாந்தரீக வேலைகளில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வந்தார். இவரின் மனைவி சுசீலா(வயது 50). இவர்களுக்கு அர்ஷா(21), அர்ஜுன்(18) என இரு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில், கடந்த 1-ம் தேதி கிருஷ்ணன் குடும்பத்தினர் இரு நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்று அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரையடுத்து, போலீஸார் கிருஷ்ணன் வீட்டில் வந்து சோதனை நடத்தினார்கள்.
அப்போது, கிருஷ்ணன் வீட்டின் பின்புறம் மாட்டுசாணம் போடுவதற்காக வெட்டப்பட்ட குழிமூடப்பட்டு இருந்தது, அதை போலீஸார் ஆட்கள் மூலம் தோண்டிப் பார்த்தபோது, கிருஷ்ணன், அவரின் மனைவி சுசிலா, பிள்ளைகள் இருவர் உள்பட 4 பேரின் உடல்களும் ஒன்றன்பின் ஒன்றாக அடிக்கிவைக்கப்பட்டு புதைக்கப்பட்டு இருந்தது.
தலையில் பலத்த காயமும், கழுத்தில் வெட்டுக்காயமும் இருந்தது. இதனால், கிருஷ்ணன் செய்த மாந்தரீகம் பலிக்கவில்லை என யாரேனும் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
கிருஷ்ணன் கொல்லப்பட்டதாக கூறப்படும் அந்த நாட்களில் கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வந்ததால், கிருஷ்ணன் வீட்டில் இருந்து எந்தவிதமான சத்தமும் அக்கம்பக்கத்து வீடுகளுக்குக் கேட்கவில்லை. மேலும், கிருஷ்ணன் வீட்டில் இருந்து சிறிது தொலைவில்தான் மற்ற வீடுகள் இருந்ததால், யார் வந்தார்கள் என்ற விவரமும் தெரியவில்லை.
இதனால், முதலில் விசாரணை தொய்வடைந்தநிலையில், போலீஸாரின் தீவிர புலன்விசாரணையில் கிருஷ்ணனிடம் உதவியாளராகப் பணிபுரிந்து தற்போது தனியாக மாந்தரீகத்தில் ஈடுபட்டு வரும் ஒருவர் காரணமாக இருக்கலாம் என கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த நபரைப் பிடித்து போலீஸார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அந்த நபரின் பெயர் அனீஷ்(வயது32) என்பது விசாரணையில் தெரியவந்தது. முதலில் தான் கிருஷ்ணனை விட்டு விலகியபின் சந்திக்கவில்லை என்று பிடிவாதமாக இருந்தநிலையில், போலீஸாரின் ‘வழக்கமான விசாரணை’யில் அனீஷ் உண்மை அனைத்தையும் தெரிவித்தார்.
இடுக்கி மாவட்ட எஸ்பி வேணுகோபாலிடம் அளித்த வாக்குமூலத்தில் அனீஷ் கூறியதாவது:
‘‘மந்திரவாதி கிருஷ்ணனிடம் 5 ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளராக இருந்து வந்தேன். எனக்கு மந்திர, தந்திரங்களைக் கற்றுக்கொடுப்பார் என நம்பியபோது எதுவும் எனக்குக் கற்றுத்தரவில்லை. இருந்தாலும், நானே சில மந்திரங்களைக் கற்று செயல்படுத்தத் தொடங்கினேன். ஆனால், மாந்தரீகம் செய்ததன் மூலம் கிருஷ்ணன் ஏராளமான பணம், நகைகளைச் சம்பாதித்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணனிடம் இருந்து விலகினேன். நானே சொந்தமாக சிலருக்கு மாந்தரீகம் செய்து வந்தேன். இதில் பலருக்கு என்னுடைய மாந்தரீகம் பலிக்கவில்லை. இதனால், வாடிக்கையாளர்களுக்கும் எனக்கும் மோதல் ஏற்பட்டது. என்னுடைய மாந்தரீகம் தோல்விக்கு என்னுடைய குருநாதர் கிருஷ்ணன் சதிச் செயல் காரணமாக இருக்கும் என சந்தேகித்தேன்.
இதையடுத்து, இதற்காக அவரைக் கொலை செய்து அவரிடம் இருக்கும் பொருட்களை அபகரிக்க முடிவு செய்தேன். எனக்கு உதவியாக எனது நண்பர் லீபிஷ் என்பதைத் துணையாக வைத்துக்கொண்டேன்.
கடந்த ஜூலை 30-ம் தேதி கிருஷ்ணன் வீட்டுக்கு இரவில் நானும், எனது நண்பர் லீபிஷும் ஒரு ஆட்டைப் பிடித்துக் கொண்டு சென்றோம். கிருஷ்ணன் வீட்டுக்குப் பின் ஆட்டைக் கட்டினோம், ஆடு சத்தம் கேட்டதும் கிருஷ்ணன் வெளியே வந்து எங்களைப் பார்த்து சண்டையிட்டார். அப்போது, பெரிய இரும்பு கம்பியால் கிருஷ்ணன் தலையில் தாக்கி அவரைக் கொலை செய்தோம்.
கிருஷ்ணன் அலறல் சத்தம் கேட்டு, அவரின் மனைவி சுசிலா வந்தார், அவரின் தலையிலும் அடித்தோம். அதன்பின் வந்த கிருஷ்ணன் மகள், மகன் அர்ஜுன் ஆகியோரையும் கம்பியால் தாக்கி வீட்டில் ஒரு அறையில் கிடத்திவிட்டு நகை, பணம் ஆகியவற்றையும், மாந்தரீக பொருட்களை எடுத்துச் சென்றோம்.
மறுநாள் காலையில், கிருஷ்ணன் வீட்டுக்கு வந்தபோது, கிருஷ்ணனின் மகன் அர்ஜுன் மட்டும் சாகாமல், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அவரைச் சுத்தியலால் அடித்து கொலை செய்தோம். இவர்கள் நான் பேரையும், கொன்று வீட்டின் பின்புறத்தில் சாணம் கொட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் ஒருவர் பின் ஒருவராக அடுக்கிப் புதைத்தோம். நாங்கள் இந்த செயலைச் செய்யும் போது, மழை பெய்து கொண்டிருந்ததால்,யாருக்கும் ஏதும் தெரியவில்லை. வீட்டைவிட்டு அக்கம்பக்கத்தினர் யாரும் வெளியே இல்லை’’ என வாக்குமூலத்தில் அனீஷ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அனீஷிடம் இருந்து பணம், நகைகள், ஆயுதங்கள், மாந்தரீக வேலைகள் செய்த கருவிகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.