மெரினாவில் கருணாநிதி உடல் அடக்கம் செய்ய அனுமதி வழங்கி தீர்ப்பு: ஸ்டாலின், கனிமொழி கண்ணீர்
மெரினாவில் உடல் அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதை கேள்விப்பட்ட ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் உணர்ச்சிப்பெருக்கால் கண்ணீர் விட்டு அழுதனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய ஸ்டாலின் உள்ளிட்டோர் தமிழக அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நேற்றிரவு வாதம் தொடர்ந்து காலையிலும் காரசாரமாக வாதம் தொடர்ந்தது.
இதையடுத்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பில் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது. தீர்ப்பு வெளியான நேரம் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட அனைவரும் ராஜாஜி மண்டபத்தில் கருணாநிதியின் உடல் அருகில் நின்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது தீர்ப்பு மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட விபரம் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட ஸ்டாலின் உணர்ச்சிப்பெருக்கால் தொண்டர்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டார். பின்னர் அப்படியே உடைந்து அழுதார். சரிந்து விழுவதுபோல் குனிந்த அவரை ஓடிச்சென்று அ.ராசா தாங்கிப்பிடித்தார்.
ஸ்டாலின் அழுவதைப்பார்த்த கனிமொழியும் அழுதபடி ஸ்டாலினை தாங்கிப்பிடிக்க ஓடிவந்தார். சட்டென்று சமாளித்துக்கொண்ட ஸ்டாலின் கண்ணீரை துடைத்துக்கொண்டார். அப்போது துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரும் கதறி அழுதனர். ஸ்டாலின் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
மொத்தத்தில் அந்த இடமே உணர்ச்சி பிரவாகமாக ஆனந்த கண்ணீருடன் காட்சி அளித்தது.