கருணாநிதி உடல்நிலை; நிதின் கட்கரி நேரில் விசாரிப்பு
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேரில் விசாரித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி, சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று, காய்ச்சலுக்காக கோபாலபுரம் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 27-ம் தேதி இரவு அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்ததால் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவக் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். 29-ம் தேதி மாலை கருணாநிதிக்கு திடீரென இதயத்துடிப்பு குறைந்தது. உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட தால், பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் படிப்படியாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 31-ம் தேதி காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘கல்லீரல் செயல்பாடு, ரத்த ஓட்டத்தில் உள்ள பிரச்சினைக்காக கருணாநிதி இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் பார்த்தனர். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய, மாநில அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் தேவகவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்துச் சென்றனர்.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று கருணாநிதியைப் பார்த்தார். கருணாநிதி உடல்நிலை குறித்து இன்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக காவேரி மருத்துவமனையில் செயல் இயக்குநர் மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்ட அறிக்கையில், ”முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரின் வயதுமூப்பின் காரணமாக முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது.
மருத்துவ உதவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து கருணாநிதி கண்காணிக்கப்படுவார். அடுத்த 24 மணி நேரத்திற்கு அவரின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதைப் பொறுத்தே கணிக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று சுமார் 8.45 மணி அளவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்தார். அவருடம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் இருந்தார். மருத்துவமனையில் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நிதின் கட்கரி கேட்டறிந்தார்.
சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நீடித்தது. காவேரி மருத்துவமனை முன்பு ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்டு தலைவா எழுந்து வா என்று முழக்கமிட்டபடி இருந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சூழலில் செய்தியாளார்களைச் சந்திக்காமல் நிதின் கட்கரி புறப்பட்டார்.