EBM News Tamil
Leading News Portal in Tamil

மின்சாரம் திருடியதாக ஏர்டெல் மீது பி.எஸ்.என்.எல். புகார்: போலீஸார் வழக்குப் பதிவு; ஏர்டெல் மறுப்பு

நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், ஜம்மு காஷ்மீரின் கார்கில் மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல்-க்குச் சொந்தமான ட்ரான்ஸ்பார்மரிலிருந்து மின்சாரம் திருடியதாக பி.எஸ்.என்.எல். போலீசில் புகார் அளிக்க போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
ஆகஸ்ட் 3ம் தேதி பி.எஸ்.என்.எல் பொதுத்துறை நிறுவனத்திடமிருந்து ஒரு எழுத்து பூர்வமான புகார் வந்தது. அதில் கார்கில் மாவட்டம் சானிகுண்ட் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல்-க்கு மட்டுமே உரிமையுள்ள, சொந்தமான ட்ரான்ஸ்பார்மரிலிருந்து ஏர்டெல் நிறுவனம் மின்சாரம் திருடியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது, என்றார்.
கார்கில் எஸ்.எஸ்.பி, கியால்போ இது குறித்து குழு ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொண்டதில், “பி.எஸ்.என்.எல் ட்ரான்ஸ்பார்மரில் ஏர்டெல் டவர் சட்ட விரோதமாக இணைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சானிகுண்ட் பகுதியில் பி.எஸ்.என்.எல் தங்கள் டவருக்கு மட்டுமே பிரத்யேகமாக பயன்படுத்தும் ட்ரான்ஸ்பார்மலிருந்து ஏர்டெல் சட்ட விரோதமாக மின்சாரத் திருட்டு செய்துள்ளது” என்று போலீஸ் தரப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஏர்டெல் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஏர்டெல் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, சம்பந்தப்பட்ட டவர் இன்ஃப்ரா டெல் நிறுவனத்தினுடையது என்றார், ஆனால் இந்த நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு பகுதியே.
“இந்த டவர் ஏர்டெல்லுக்குச் சொந்தமானதல்ல, டவர் நிறுவனம் இதனை இயக்கி வருகிறது. எங்கள் பெயர் இழுக்கப்பட்டது குறித்து அதிர்ச்சியடைந்துள்ளோம். உண்மையை சரிபார்க்காமல் புகார் அளித்துள்ளனர். நாங்கள் இதனை பிஎஸ்என்எல் வசம் எடுத்துச் செல்வோம், அதிகாரிகளிடமும் விளக்க தொடர்பில் இருந்து வருகிறோம்” என்றார் ஏர்டெல் செய்தித் தொடர்பாளர்.