மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை பார்த்தார் குடியரசு தலைவர் கோவிந்த்: விரைவில் நலம் பெற விரும்புவதாக ட்விட்டரில் வாழ்த்து
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று பார்த்தார். அவரது உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழியிடம் விசாரித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி, சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று, காய்ச்சலுக்காக கோபாலபுரம் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 27-ம் தேதி இரவு அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்ததால் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவக் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். 29-ம் தேதி மாலை கருணாநிதிக்கு திடீரென இதயத்துடிப்பு குறைந்தது. உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட தால், பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் படிப்படியாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 31-ம் தேதி காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘கல்லீரல் செயல்பாடு, ரத்த ஓட்டத்தில் உள்ள பிரச்சினைக்காக கருணாநிதி இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் பார்த்தனர். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய, மாநில அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் தேவகவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்து சென்றனர்.
இந்நிலையில், கருணாநிதியை பார்த்து நலம் விசாரிப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று சென்னை வந்தார். பிற்பகல் 2.27 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வந்த அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி. டி.கே.ராஜேந்திரன், முப்படை அதிகாரிகள் வரவேற்றனர்.
அங்கிருந்து பிற்பகல் 2.37 மணிக்கு காரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் புறப்பட்ட குடியரசுத் தலைவர், 2.47 மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு, அவரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் வரவேற்றனர். அதன்பின், மருத்துவ மனையில் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ராம்நாத் கோவிந்த் கேட்டறிந்தார். கருணாநிதிக்கு அளிக் கப்படும் சிகிச்சைகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் காவேரி மருத்துவமனை யின் செயல் இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் விளக்கிக் கூறினார். அப்போது, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடன் இருந்தார்.
அதன்பின், அங்கிருந்து விமான நிலையம் திரும்பிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார். அவரை ஆளுநர், துணை முதல்வர்உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சென்னையில் மு.கருணாநிதியை பார்த்தேன். அவரது உடல்நிலை குறித்து குடும்பத்தினர், மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். தமிழக முன்னாள் முதல்வரும், பொது வாழ்வில் மூத்தவருமான கருணாநிதி விரைவில் நலம் பெற விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி விமான நிலையம் முதல் மருத்துவமனை வரை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மருத்துவமனையை சுற்றிலும் அதிக அளவில் போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
மக்களை நோக்கி…
மருத்துவமனையில் கருணா நிதியை பார்த்துவிட்டு வெளியே வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த, காரில் ஏறி புறப்பட்டார். மருத்துவமனையின் வெளி வாயில் அருகில் வந்தபோது அவரது கார் நின்றது. அதில் இருந்து இறங்கிய குடியரசுத் தலைவர், தடுப்புகளுக்கு பின்னால் நின்றிருந்த பொதுமக்கள், திமுகவினரைப் பார்த்து கையசைத்துவிட்டு, மீண்டும் காரில் ஏறி புறப்பட்டார்.