EBM News Tamil
Leading News Portal in Tamil

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி நியமனம்: ஜனாதிபதி ஒப்புதல்

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி தஹில் ரமணி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி செயல்பட்டு வருகிறார். இவர் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 1985-ம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்த நீதிபதி இந்திரா பானர்ஜி, கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 2016-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணிமாற்றம் செய்யப்பட்ட பானர்ஜி, 2017 ஏப்ரல் 5-ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக செயல்பட்டு வருகிறார். தற்போது இவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டதில் அவரையும் நியமனம் செய்து ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
தற்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இடம் காலியாக இருப்பதால், மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி தஹில் ரமணி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டார். அந்த பரிந்துரையை ஏற்று ஜனாதிபதியும் நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளார். 1958-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி பிறந்த நீதிபதி தஹில் ரமணி 1982 ஆம் ஆண்டு முதல் மும்பை மற்றும் கோவாவில் கீழ் நீதிமன்றங்களில் வழங்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.
சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் தேர்ச்சி பெற்ற இவர் மும்பை கீழ் நீதிமன்றங்களில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக செயல்பட்டார். பின்னர் மகாராஷ்டிரா அரசின் அரசுத் தரப்பு வழக்கறிஞராகவும் பல ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றினார்.
பின்னர் 2001-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ம் நாள் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 17 ஆண்டுகள் மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பல சிறந்த தீர்ப்புகளை வழங்கிய அவர் தற்போது மும்பை உயர் நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதியாக உள்ளார்.
தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்பதன் மூலம், சென்னையில் இரண்டாவது பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையையும் தஹில் ரமணி பெறுகிறார்.