பரூக் அப்துல்லா வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் சுட்டுக்கொலை: தீவிரவாதியா? என விசாரணை
காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் ஜம்மு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவரும், காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லாவுக்கு ஜம்மு பதிண்டி பகுதியில் வீடு உள்ளது. அங்கு காரில் வந்த மர்ம நபர் ஒருவர் வாசலில் பயங்கரமாக மோதி நிறுத்தினார். பின்னர் வேகமாக அத்துமீறி உள்ளே செல்ல முற்பட்டார்.
வாசலில் நின்ற பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் அவர் நிற்காமல் அத்துமீறி உள்ளே நுழைந்தார். இதையடுத்து காவலர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உள்ளே நுழைய முற்பட்ட நபர் யார், ஏதேனும் சதித்திட்டத்துடன் அவர் வந்தாரா என விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பரூக் அப்துல்லாவின் மகனும், முன்னாள் முதல்வருமான ஓமர் அப்துல்லா கூறுகையில் ‘‘தீவிரவாதிகளின் சதித்திட்டம் காரணமா என விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர் எதற்காக அங்கு வந்தார் என்பதை உறுதி செய்ய வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில் ‘‘பரூக் அப்துல்லாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட நபர் அங்கிருந்த பொருட்களை உடைத்ததுடன், காவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் காவலர் ஒருவர் காயமடைந்தார். இதன் காரணமாகவே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்’’ எனக் கூறினார்