அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி; மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் லட்சக்கணக்கானோரின் பெயர்கள் விடுபட்டிருக்கும் விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று மீண்டும் அமளியில் ஈடுபட்டன. இதனால், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
மாநிலங்களவை அதன் தலைவர் வெங்கய்ய நாயுடு தலைமையில் நேற்று காலை 11 மணிக்கு கூடியது. அலுவல் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, அசாமில் மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய மக்கள் பதிவேட்டு பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கோஷமிட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் அமித் ஷா தெரிவித்த கருத்துகளை, அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
அமளி தொடர்ந்து நீடித்ததால், மதியம் 2 மணி வரை அவையை வெங்கய்ய நாயுடு ஒத்திவைத்தார். இதையடுத்து, அவை மீண்டும் கூடியதும், அசாம் தேசிய பதிவேடு விவகாரம் குறித்து பாஜக எம்.பி. அமித் ஷா நேற்று முன்தினம் ஆற்றிய உரையை முடித்து வைக்குமாறு வெங்கய்ய நாயுடு கேட்டுக்கொண்டார். ஆனால், எதிர்க்கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுகேந்து சேகர் ராய், ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி பேசினார். அவர் கூறுகையில், “ஒரு உறுப்பினர், தமது உரையின் மீதியை நிறைவு செய்ய வேண்டுமானால், அதற்கு அவைத் தலைவரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். ஆனால், எந்தவித அனுமதியும் கோரப்படாமல் அவர் எப்படி பேசலாம்?” எனக் கேள்வியெழுப்பினார்.
இதையடுத்து, அமித் ஷா பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். வெங்கய்ய நாயுடு பல முறை கேட்டுக்கொண்டும், எம்.பி.க்கள் இருக்கைக்கு திரும்பாமல் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து, அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதே விவகாரத்தை எழுப்பி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவையில் நேற்று கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.