தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் மாவட்டந்தோறும் நீட் தேர்வு மையங்கள்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்
சென்னை ஐஐடியில் மாணவர்களின் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் ‘ஹெக்காத்தன்’ என்ற குழு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவில் உள்ள மாணவ, மாணவிகளுடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
‘ஹெக்காத்தான்’ கண்டு பிடிப்பு போட்டிக்காக நாடு முழுவதும் 50 ஆயிரம் மாணவர்கள் தங்கள் புதிய திட்டங்களை உருவாக்கியுள்ளனர். பல்வேறு துறைகளில் நிலவும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கான தீர்வுகளையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்தும் அளித்து வருகிறது. ஆய்வுகளுக்கான கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கிறது. அத்துடன் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவித் தொகைகளையும் வழங்குகிறது.
மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களின் 200 ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ரூ.600 கோடி ஒதுக்கியுள்ளோம். புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவதற்கான கால அளவு குறைக்கப்பட்டு இருக்கிறது.
நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் ஏராளமான பிழைகள் இருந்ததாக கூறுகிறீர்கள். நீட் தேர்வு கேள்விகளில் தவறுகள் ஏற்படுவதை தவிர்க்க வினாத்தாள் தயாரிப்பில் தமிழகத்தில் இருந்து மொழிபெயர்ப்பாளர்கள் இடம்பெற வேண்டும். இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வை வேறு மாநிலங்களில் எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டது. அடுத்த ஆண்டு முதல் தமிழக மாணவர்கள் அவரவர் மாவட்டங்களிலேயே நீட் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு மையங்கள் அமைக்கப் படும்.
நீட் தேர்வுக்கான வினாக்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமின்றி மாநில பாடத்திட்டத்தில் இருந்தும் கேட்கப்படும். தமிழகத்தில் கூடுதல் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை விரைவில் நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இவ்வாறு கூறினார்.