அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்கள் அதிகரிப்பு: உயர்கல்வித் துறை அனுமதி
கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் மாணவர்களிடமிருந்து அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதால் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்களை அதிகரித்துக் கொள்ள, உயர்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
நடப்பு கல்வி ஆண்டில் (2018-2019) அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், எனவே, மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் கலை பாடப்பிரிவுகளுக்கு கூடுதலாக 20 சதவீதமும் அதேபோல், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் கூடுதலாக 20 சதவீதமும் மாணவர்களைச் சேர்க்க அனுமதி அளிக்குமாறு கல்லூரி கல்வி இயக்குநர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
அவரது கருத்துருவை பரிசீலித்து அரசு, 2018-2019-ம் கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், கலை பாடப்பிரிவுகளுக்கு 20 சதவீதம் கூடுதலாகவும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கு ஏற்ப 20 சதவீதம் கூடுதலாகவும் மாணவ, மாணவிகளை சேர்ப்பதற்கு அனுமதி அளித்து ஆணையிடுகிறது. இந்தக் கூடுதல் இடங்களுக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் அனுமதி பெற வேண்டும் எனவும் உத்தரவிடுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.