“இன்னோவா வேண்டாம்.. பார்ச்சூனர்தான் வேண்டும்”: அடம்பிடிக்கும் கர்நாடக அமைச்சர்
கர்நாடக அமைச்சராக பதவியேற்றுள்ள காங்கிரஸைச் சேர்ந்த ஜமீர் அகமது கான், தனக்கு வழங்கப்பட்ட இன்னோவா கார் வேண்டாம் என்றும், விலை உயர்ந்த பார்ச்சூனர் கார் தான் வேண்டும் எனவும் அடம்பிடித்து வருவது ஆளுங்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் மஜத – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், டிராவல்ஸ் அதிபருமான ஜமீர் அகமது கான் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். மாநிலத்தில் அனைத்து அமைச்சர்களையும் போலவே அவருக்கும் அண்மையில் டொயோட்டா இன்னோவா கார் வழங்கப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் ஜமீர் அகமது கான், தனக்கு இன்னோவா கார் வேண்டாம் என்றும், அதை விட வசதிகள் நிறைந்திருக்கும் டொயோட்டா பார்ச்சூனர் கார்தான் வேண்டும் எனவும் அடம்பிடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களும், மஜத அமைச்சர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.