EBM News Tamil
Leading News Portal in Tamil

நன்றாக பயிற்சி செய்து பாடுங்கள்; அதுதான் நாளை கிளாஸிக்காக தகுதிபெறும்: லதா மங்கேஷ்கர் யோசனை

‘இன்றைய பாடகர்கள் பயிற்சி செய்யாமலேயே பாடுவதைப் பார்க்கமுடிகிறது. அதனாலேயே அப்பாடல்கள் மதிப்பிழந்துபோவதையும் காணமுடிகிறது. நன்றாக பயிற்சி செய்துகொண்டு பாடுங்கள் அதுதான் நிலைக்கும்’ என யோசனை தெரிவித்துள்ளார் புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர்.
அவர் ஐஏஎன்எஸ்க்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து விரிவாகப் பேசினார்.
லதா மங்கேஷ்கர் இப்போதெல்லாம் அதிகம் இசையைக் கேட்பதில்லை. தனது சொந்த பாடல்களைக்கூட அவர் கேட்பதில்லையாம்.
”என்னுடைய பாடல்களையே என்னால் சகித்துக்கொள்ளமுடியாத நிலைதான் இப்போது உள்ளது. என்னுடைய பாடல்களை ரேடியோவிலோ அல்லது டெலிவிஷனிலோ போடுகிறார்கள் என்றால் உடனே அங்கிருந்து வெளியேறிவிடுவேன். ஒருவேளை நான் பாடுவதைக் கேட்க நேர்ந்தால், அதில் ஒரு டஜன் தவறுகளைக் கண்டுபிடிக்கமுடிகிறது” என்கிறார்.
இந்திய திரையுலகை கிறங்கடித்த ஒரு உன்னதமான பாடகி என்று பலராலும் அறியப்பட்டவரிடமிருந்து இப்படி ஒரு கருத்து வருவது சற்று வினோதம்தான். ஆனால், தலைசிறந்த ஹிந்துஸ்தானிய கிளாஸிக் பாடகர் உஸ்தாத் படே குலாம் அலி கான் ஒருமுறை, ”லதா ஒரு கானப் பிசாசு, அவர் எப்போதும் தவறாக பாடியதில்லை” என்று தெரிவித்துள்ளதைப் பற்றி லதாஜியிடம் கேட்டால் அவர் சிரிக்கிறார்.
”அது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. நான் செய்த தவறுகள் நிச்சயம் எனக்குத் தெரியும்” என்கிறார்.
லதா மங்கேஷ்கர் மேலும் கூறுகையில் ‘‘ஆனால் எந்த ஒரு கலைஞரும், பாடகர் அல்லது மற்ற துறையைச் சார்ந்த கலைஞர்கள், சிறப்பான தேர்ச்சி பெற வேண்டும் அவர்கள் எவ்வளவு சாதித்தார்கள் என்பது முக்கியமில்லை. ஆனால் இன்று பாடகர்களில் கட்டுப்பாடும் பொறுமை இல்லாததைப் பார்க்கிறேன்.
தாங்கள் சாதித்ததாக நினைக்கும் அவர்களது மகிழ்ச்சியை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் என்ன சாதித்தோம் என்பதை யோசிக்க அவர்களுக்கு நேரமில்லை. உண்மையில், தான் சாதித்தது குறித்து எந்த கலைஞரும் திருப்தியடைந்ததில்லை. எல்லையற்ற இன்னொரு வானம் இருக்கிறது, அதை நீங்கள் மிகச் சாதாரணமாக அடைந்துவிடமுடியும் என்று நினைக்கிறீர்கள். அதுதான் பிரச்சினை.
இன்றைய பாடகர்களிடம் நான் பார்க்கும் ஒரு விஷயம், பிராக்டிஸ் செய்யும் பழக்கம் இல்லாதது. இசையைப் பொறுத்தவரை சாதகம் அதாவது பயிற்சி என்பது சிறப்பாக பாடுவதற்கு வழிவகை செய்யக்கூடியது. ஒருவேளை நான் உயரங்களை எட்டியிருந்தால் நான் தொடர்ச்சியாக பாடல்பயிற்சிகளில் ஈடுபட்டதுதான் முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.
அதேநேரம் நான் தொடர்ச்சியாக ரிகார்டிங்களில் இருந்ததால், பலநேரங்களில் பாடல் பயிற்சியில் ஈடுபட எனக்கு போதுமான நேரம் இருந்ததில்லை. ஆனால் இப்பொழுதும்கூட பாடல் பயிற்சியில் ஈடுபட நேரம் ஒதுக்கவே விரும்புகிறேன். ஆனால் நேரம்தான் போதவில்லை.
ஆனால் எனக்கு மிகப்பெரிய பெயர் வாங்கித்தந்த கிளாஸிக் பாடல்கள் எல்லாமும் நான் நிறையநேரம் பயிற்சி எடுத்துக்கொண்டபிறகு பாடியவைதான். ஆனால் இன்றைய பாடகர்கள் தங்கள் பாரம்பரிய கிளாஸிக் பாடல்களுடனான தொடர்ச்சியை இழந்து வருகிறார்கள். ஒரு ஏ.ஆர்.ரஹ்மானோ அல்லது ஒரு சங்கர் மகாதேவனோ தங்கள் இசைப் பாரம்பரியம் எது என்று உணர்ந்தவர்களாதலால் அவர்கள் பெரிய வெற்றிகளைத் தொடுகிறார்கள்.
பழைய கிளாஸிக் பாடல்களை ரீ மிக்ஸ் செய்வது மற்றும் அதனை உள்ளடக்கிய வெர்ஷன்களை உருவாக்குவது எல்லாம் உடனடி வெற்றிகள் வேண்டும் என்பதற்கான மிகப்பெரிய சோம்பேறித்தனத்தின் வேர்களாகும்.
நினைவில் வைத்து கொள்ளுங்கள், ஒரு கிளாசிக் நிலையை அடைந்த ஒரு பாடல் மிகவும் தகுதி வாய்ந்த ஒரு படைப்பாகக் கருதப்படுகிறது அதன் தரம் நம்மை ஏமாற்றக் கூடியதல்ல.
ரஃபி சாஹேப், கிஷோரெடா (குமார்). முகேஷ் பாய்யா ஆகியோரது பாடல்களும், என்னுடைய, என் தங்கை ஆஷாவினுடைய பாடல்களையும் ரீ மிக்ஸ் செய்து பாடியதை நான் கேட்டிருக்கிறேன். அதில் எல்லாம் எந்த சுவையும் இல்லை. தயவுசெய்து அசலான இசையை உருவாக்குங்கள், போலச்செய்தல் எனப்படும் ரீமிக்ஸ் ஒருபோதும் கலையாகாது.” என்று அழுத்தம் திருத்தமாக தனது கருத்துக்களைச் சொன்ன லதாஜி சிரித்தபடி பேட்டியை நிறைவு செய்தார்.