கூட்டணி பற்றி சோனியா காந்தியிடம் பேசவில்லை: கமல்ஹாசன்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தாகவும், கூட்டணி குறித்து ஏதுவும் பேசிவில்லை என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். கட்சிக்கு நிர்வாகிகள் நியமனம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கையில் தீவிரம் காட்டி வரும் அவர், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.
நேற்று டெல்லி சென்ற கமல்ஹாசன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, “கமல்ஹாசனுடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் ஆகிய இரு கட்சிகளைப் பற்றியும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் நாங்கள் விரிவாக ஆலோசித்தோம்” என்று குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை, கமல்ஹாசன் இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையி்ல் ‘‘சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். தமிழக அரசியல் சூழல் குறித்து அவருடன் விவாதித்தேன். கூட்டணி குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை’’ எனக் கூறினார்.