EBM News Tamil
Leading News Portal in Tamil

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் தமிழகத்துக்கு திறக்கப்பட்ட நீர் விநாடிக்கு 700 அடியாக குறைப்பு: கபினிக்கு விரைவில் சமர்ப்பண பூஜை

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததன் எதிரொலியாக, தமிழகத்துக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு ஒரே அடியாக விநாடிக்கு 700 கன அடியாக குறைக்கப்பட்டது.
கர்நாடகாவில் கடந்த மே மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பரவலாக பெய்து வருகிறது. இதனால் காவிரியின் முக்கிய‌ நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் கடந்த இரு வாரங்களாக பெய்த பலத்த மழை தற்போது குறைந்துள்ளது. கடந்த இரு தினங்களாக மழை பெய்யாததால் காவிரியின் குறுக்கேயுள்ள ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு வந்த நீரின் அளவு பன்மடங்கு குறைந்துள்ளது. இதேபோல கபினி ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதிகளிலும் மழை குறைந்ததால், மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, ஹாரங்கி அணையின் நீர்மட்டம் 2830.71 அடியாக உயர்ந்திருக்கிறது. இந்த அணைக்கு விநாடிக்கு 620 கன அடி நீர் மட்டுமே வருவதால், 30 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதே போல ஹேமாவதி அணையின் நீர்மட்டம் 2,899.08 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வந்துக் கொண்டிருப்பதால் 200 கன அடி நீர் திறந்துவிடப் படுகிறது.
மண்டியா மாவட்டத்தில் 124.80 அடி உயரமுள்ள‌ கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 101.90 அடியாக உயர்ந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு பன்மடங்கு குறைந்து, விநாடிக்கு 11,297 கன அடி அளவுக்கு வந்து கொண்டிருப்பதால், 369 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 67.98 அடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு நீர்மட்டம் 100 அடியை கடந்திருப்பது குறிப் பிடத்தக்கது.
மைசூரு மாவட்டத்தில் கபினி அணையின் நீர்மட்டம் நேற்று 2281.50 அடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த வாரத்தில் அணைக்கு விநாடிக்கு 36,650 கன அடி நீர் வந்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது 9,593 கன அடி நீர் மட்டுமே வருகிறது. இதனால் அணையில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்பட்ட‌ 36,000 கன அடி நீரின் அளவு ஒரே அடியாக, 729 கன அடியாக குறைக்கப்பட்டுள்ள‌து. இதனால் தமிழக எல்லையில் உள்ள‌ பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் மூலம் மேட்டூர் அணைக்கு செல்லும் நீரின் அளவு கடுமை யாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
கபினி அணை கடந்த 15-ம் தேதி முழு கொள்ளளவை நெருங்கியது. அதனால் அணைக்கு வந்த மொத்த நீரும், தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் வயநாட்டில் மழைப்பொழிவு குறைந்ததால் கபினி அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்தது. தற்போது மொத்தமுள்ள 2,284 அடியில் (கடல் மட்டத்தில் இருந்து) 2281.50 அடியாக உள்ளது. இன்னும் அதிகபட்சம் ஒரு அடி நீரை கபினி அணையில் சேமிக்க காவிரி நீர்ப்பாசன கழகம் முடிவெடுத்துள்ளது.
அதன்பிறகு கபினி அணைக்கு சமர்ப்பண பூஜை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வர் குமார சாமி டெல்லியில் இருந்து கர்நாடகா திரும்பிய பின்னர், ஓரிரு நாட்களில் கபினி அணையில் நடைபெறும் சமர்ப்பண பூஜையில் பங்கேற்பார். பின்னர் கபினி அணையில் இருந்து பாசனத்துக்கு நீரை திறந்துவிடுவார் எனஅதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.