டெல்லி நிர்வாகம் சீர்குலைந்திருப்பதை பிரதமர் மோடி கண்டுகொள்ளாதது ஏன்? – பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் கேள்வி
டெல்லியில் அரசு நிர்வாகம் சீர்குலைந்திருப்பதை பிரதமர் நரேந்திர மோடி கண்டுகொள்ளாதது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் அவர் கூறியிருப்ப தாவது:
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல், பாஜகவினர், முதல்வர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு அதிகாரிகளோ தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.
டெல்லி அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே நடந்து வரும் இந்த மோதல் போக்கால், அங்கு அரசு நிர்வாகம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. ஆனால், இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டிய பிரதமர், அதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. மொத்தத்தில், இந்த நாடகத்தில் டெல்லி மக்களே பலிகடா ஆக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.