EBM News Tamil
Leading News Portal in Tamil

கர்நாடக மாநிலத்தில் நாய் செத்தால் கூட மோடி பதில் வேண்டுமா? – பிரமோத் முத்தாலிக் பேச்சால் சர்ச்சை

பெங்களூருவில் சுட்டுக்கொல்லப்பட்ட மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக், நாயுடன் ஒப்பிட்டு பேசிய விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (55) கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் ஸ்ரீராம் சேனா அமைப்பை சேர்ந்த பரசுராம் வாக்மோர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் உடன் பரசுராம் வாக்மோர் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் பிரமோத் முத்தாலிக் பேசியதாவது:
கவுரி லங்கேஷ் கொலைக்கும் ஸ்ரீராம் சேனா அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதுபோல் பரசுராம் வாக்மோருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வோரைப் பற்றியெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில்தான் கல்புர்கியும், கவுரி லங்கேஷும் கொல்லப் பட்டனர். இதற்கு இந்துத்துவா அமைப்பினரை குற்றம் சொல்பவர்கள், ஏன் காங்கிரஸ் அரசின் தோல்வியை கேட்க மறுக்கின்றனர். கர்நாடகாவில் நாய் செத்துப் போவதற்கெல்லாம் மோடி பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா?
இவ்வாறு பிரமோத் முத்தாலிக் பேசினார்.
முத்தாலிக்கின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும், எழுத்தாளர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடக முதல்வர் குமாரசாமி, “இத்தகைய ஆணவப் பேச்சை ஏற்க முடியாது. வன்முறையை தூண்டும் வகையில் பேசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.