EBM News Tamil
Leading News Portal in Tamil

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய போலீஸார் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன்?- பிருந்தா காரத் கேள்வி

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸார் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அவர் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன், எஸ்பி முரளி ராம்பா ஆகியோரை சந்தித்து மக்கள் தெரிவித்த பிரச்சினைகளை எடுத்துக் கூறினார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தூத்துக்குடி மாவட்டம் மடத்தூரைச் சேர்ந்த சுமார் 75 பெண்கள் இரவு போலீஸ் துன்புறுத்தலுக்கு பயந்து கோயிலில் தூங்கியதாக கூறினர். யாரையாவது போலீஸார் விசாரிக்க வேண்டுமானால், பகலில் விசாரிக்க வேண்டும். தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக சாதாரண மக்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
போலீஸார் மீது வழக்கு பதிவு செய்யாமல் விசாரணையை நடத்துவது என்பது விசாரணை மீது நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தாது என்றார்.
கார்ப்பரேட் நிறுவனங்கள்
இதற்கிடையே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களையும், சிகிச்சை பெற்று வருவோரையும் சந்தித்த சமூக ஆர்வலர் மேதாபட்கர் செய்தியாளர்களிடம் கூறியது:
கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் தற்போது நாட்டை ஆளுகின்றன. மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பெரிய தொழிற்சாலைகளுக்கு அதிகளவில் அனுமதி கொடுக்கப்பட்டது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக சுற்றுச்சூழல் விதிகள், சட்டங்களை மத்திய அரசு தளர்த்தி வருகிறது எனறார்.