பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி குறைக்கப்பட மாட்டாது: அருண் ஜேட்லி திட்டவட்டம்
பெட்ரோல், டீசல் வருவாயை நம்பியிருக்க வேண்டாம் என்றால் குடிமக்கள் தங்கள் வரிகளை நேர்மையாகச் செலுத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்தியுள்ளார்.
ஆகவே பெட்ரோல், டீசல் உற்பத்திவரியைக் குறைக்கும் வாய்ப்பே இல்லை, இது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்று அருண் ஜேட்லி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சம்பளதாரர்கள் வரிகளை சரியாகச் செலுத்தி வரும் நிலையில், “மற்றவர்கள் தங்கள் வரிசெலுத்துதலில் முன்னேற்றம் அடைய வேண்டும். ஆகவே, அரசியல் தலைவர்கள், கருத்தாளர்களுக்கு என்னுடைய முறையீடு என்னவெனில் எண்ணெய் அல்லாத வகையினங்களில் வரி ஏய்ப்பு முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என்பதே. மக்கள் நேர்மையாக வரிகளைச் செலுத்தினால் பெட்ரோலியப் பொருட்கள் மீதான அதிகவரிவிதிப்பை நம்பியிருக்க வேண்டிய அவசியமிருக்காது.
இது குறித்து தன் முகநூல் பதிவில் ஜேட்லி மேலும் கூறும்போது, “கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசின் வரி-ஜிடிபி விகிதாச்சாரம் 10%லிருந்து 11.5% ஆக அதிகரித்துள்ளது. இதில் ஏறக்குறைய பாதி, ஜிடிபியின் 0.72% பெட்ரோலியப் பொருட்கள் வரி-ஜிடிபி அதிகரிப்புக்குப் பங்களிப்பு செய்துள்ளது.
எண்ணெய் அல்லாத வரிகள்-ஜிடிபி விகிதாச்சாரம் 2017-18-ல் 9.8%ஆக உள்ளது. இது 2007-2008- காலக்கட்டத்தை ஒப்பிடும்போது அதிகம். இந்த அரசு நிதி-முன் ஜாக்கிரதை அல்லது விவேகத்தை வலுவாக வளர்த்துள்ளது. நிதியளவில் ஒழுக்கமின்மையால் கடன் வாங்குவதுதான் அதிகரிக்கும்.
ஆகவே நிதியளவில் பொறுப்பான, நிதியளவில் வலுவான மத்திய அரசுதான் நுகர்வோருக்கு ரிலீஃப் அளிக்க முடியும்” என்று எழுதியுள்ளார்.
ப.சிதம்பரத்தின் ஆலோசனை:
பெட்ரோல், டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.25 குறைக்க வேண்டும் என்ற ப.சிதம்பரத்தின் ஆலோசனையை மறைமுகமாக விமர்சித்த அருண் ஜேட்லி, “இது பொறியில் சிக்கும் ஆலோசனை” என்று கூறியுள்ளார். மேலும், “தனிச்சிறப்பான எனக்கு முன்னோடியே இதனைச் செய்ய முன்வரவில்லை என்பதே கசப்பான உண்மை” என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
“இந்தியாவை நிரந்தரமாக கடனை சமாளிக்க முடியாத நாடாக்கும் நோக்கம் கொண்ட ஆலோசனையாகும் அது. இதனை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி தனது வழிமுறையாக விட்டுச் சென்றுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முடக்குக் கொள்கையிலிருந்து தேஜகூவின் “வேகமாக வளரும் பொருளாதாரம்” என்பதற்கான மாற்றம் இதனை முடிந்த முடிவாக அறிவுறுத்துகிறது. வரி-ஜிடிபி விகிதாச்சாரத்தை வளர்ச்சிபெறச் செய்ய மத்திய அரசு அவா கொள்கிறது” என்றார்.
அரசு உத்தேசங்களின் படி உற்பத்தி வரியில் குறைக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் நாட்டுக்கு ரூ.13,000 கோடி வருவாயை இழக்கச் செய்யும்.
இந்நிலையில் எண்ணெய் அல்லாத பிற துறையின் வரிசெலுத்துதல் முன்னேற்றம் கண்டேயாக வேண்டும் என்று கூறிய அருண் ஜேட்லி, “நேர்மையாக வரிசெலுத்துவோரின் வேதனை என்னவெனில் வரிகளில் தங்கள் பங்கைச் செலுத்துவதோடு, வரி ஏய்ப்பவர்களுக்கும் சேர்த்து இழப்பீடு செய்கின்றனர்” என்று கூறினார்.