EBM News Tamil
Leading News Portal in Tamil

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழிலும் எழுதலாம்: மத்திய அமைச்சர் ஜவடேகர் விளக்கம்

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ் உள்பட 20 மொழிகளிலும் எழுதலாம் என்று சிபிஎஸ்இ வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களான கேந்திர வித்யாலயா,நவோதயா பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுவதற்கு மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வில் (சிடிஇடி) தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், குஜராத்தி உள்ளிட்ட 20 மொழிகளில் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், மத்திய அரசு திடீரென தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட 17 மொழிகளில் தேர்வு எழுதுவதை நீக்கிவிட்டதாகச் செய்திகள் வந்தன.
ஆங்கிலம், இந்தி,சமஸ்கிருதம் ஆகிய 3 மொழிகளில் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்று சிபிஎஸ்இ விதிமுறைகளை வகுத்தது. இந்த அறிவிப்பு அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கடும் எதிர்ப்பைக் கிளப்பியது. தமிழகத்திலும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் மத்தியஅரசின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையே திமுக எம்.பி. கனிமொழி சிபிஎஸ்இ முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், ”மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ் உள்ளிட்ட 16 மொழிகள் தேர்வு எழுதமுடியாமல் நீக்கப்பட்டு சிபிஎஸ்இ விடுத்த அறிவிப்பு கண்டனத்துக்குரியது. கூட்டாட்சியின் ஆணிவேரைப் பிடுங்கும் முயற்சியாகும். சிபிஎஸ்இயில் படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த உத்தரவு மிகப்பெரிய பின்னடைவாகும்.
மாணவர்கள் தங்களின் தாய்மொழிக்குப் பதிலாக இந்தியையும், சமஸ்கிருதத்தையும் படிக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இது நாட்டில் மற்றொரு மொழிப்போருக்கு இட்டுச் செல்லும். இந்தி, இந்து இந்துஸ்தானத்தைக் கட்டமைக்கும் பாஜகவின் முயற்சி இது” என்று அவர் கண்டித்திருந்தார்.
இந்நிலையில், வழக்கம் போல் 20 மொழிகளிலும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கம் போல் அனைத்து இந்திய மொழிகளிலும் நடத்தப்படும். ஏற்கெனவே இருந்த முறையான 20 மொழிகளிலும் கேள்விகள் கேட்கப்பட்டுத் தேர்வுகள் நடத்தப்படும். 17 மொழிகள் நீக்கப்பட்டது என்ற அறிவிப்பு செல்லாது. இது குறித்து ஏற்கெனவே நான் சிபிஎஸ்இ கல்வி வாரியத்துக்கு உத்தரவிட்டு வழக்கம் போல் 20 மொழிகளில் தேர்வுகள் நடத்தப் பட வேண்டும் என்று கூறிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.