துணை நிலை ஆளுநர் இல்லத்தில் ‘ஸ்டிரைக்’ நடத்த யார் அதிகாரம் அளித்தது? அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
போராட்டம் நடத்துவதென்றால், வெளியே சென்று நடத்துங்கள், துணை நிலை ஆளுநர் இல்லத்தில் போராட்டம் நடத்த உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கேள்விகளால் விளாசியது உயர் நீதிமன்றம்.
கடந்த 3 மாதங்களுக்கு முன் டெல்லி அரசின் தலைமைச் செயலாளரை ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில், அமைச்சர்களுடன் ஐஏஎஸ் அதிகாரிகள் எந்தவிதமான ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும், அரசும் குற்றம் சாட்டுகின்றன.
மேலும், ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர துணை நிலை ஆளுநர் பைஜால் எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல், அவர்களைத் தூண்டிவிடுகிறார் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டுகிறது. ஆனால், ஐஏஎஸ் அதிகாரிகள் தாங்கள் எந்தவிதமான போராட்டமும் நடத்தவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர்.
ஐஏஎஸ் அதிகாரிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி துணை நிலை ஆளுநர் இல்லத்தில் கடந்த 7 நாட்களாக அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் ஷிசோடியா, அமைச்சர்கள் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் துணை ஆளுநர் வீட்டில் நடத்தி வரும் போராட்டத்துக்கு எதிராகவும், மற்றொரு மனு ஐஏஎஸ் அதிகாரிகள் போராட்டத்துக்கு எதிராகவும் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இது தவிர டெல்லி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக எம்எல்ஏவுமான விஜேயந்திர குப்தா சார்பிலும் கேஜ்ரிவாலின் போராட்டத்துக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஏ.கே. சாவ்லா, நவீன் சாவ்லா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் டெல்லி அரசு சார்பாக ஆஜராகி இருந்த வழக்கறிஞர்களை நோக்கி சரமாரிக் கேள்விகளை எழுப்பினார்கள்.
துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்த உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நீங்கள் போராட்டம் நடத்துவதென்றால் துணை நிலை அலுவலகத்துக்கு வெளியே நடத்தலாம். நீங்கள் அலுவலகத்துக்குள் அமர்ந்து போராட்டம் நடத்துவதற்கு யார் அனுமதி அளித்தது. வேறு ஒருவருடைய வீட்டிலோ அல்லது அலுவலகத்துக்குள் அமர்ந்து போராட்டம் நடத்த முடியாது என்று காட்டமாகத் தெரிவித்தனர்.
அப்போது டெல்லி அரசு சார்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் சுதிர் நந்த்ராஜக் வாதிடுகையில், முதல்வர் கேஜ்ரிவாலும், அமைச்சர்களும் அவர்களுக்கு இருக்கும் தனிப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில்தான், அரசியலமைப்புக்கு உட்பட்டுத்தான் போராட்டம் நடத்தினார்கள். இந்த விஷயத்தில் நீதிமன்றம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்குத்தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அமைச்சர்களுடன் அவர்கள்தான் துறை ரீதியான கூட்டங்களில் பங்கேற்க மறுக்கிறார்கள். ஆனால், அவர்களோ போராட்டம் நடத்தவில்லை என்று நேற்று கூறியிருக்கிறார்கள் ஆதலால், போராட்டம் தொடராமல் இருக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மத்திய அரசு தார்பில் ஆஜராகிய வழக்கறிஞர், ஐஏஎஸ் அதிகாரிகள் எந்தவிதமான போராட்டங்களும் நடத்தவில்லை. துணை நிலை ஆளுநர் இல்லத்தில் இருந்து முதல்வர் கேஜ்ரிவால், அமைச்சர்களை வெளியேற உத்தரவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்காமல், வழக்கை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.