EBM News Tamil
Leading News Portal in Tamil

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தாக்குதல் மலாலாவை சுட்ட தலிபான் தலைவர் பலி

மலாலாவைச் சுட்ட பாகிஸ்தானின் தலிபான் பிரிவு தலைவர் மவுலானா பஸ்லுல்லா அமெரிக்கா நடத்திய துல்லியமான வான்வெளித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள கிழக்கு குனார் மாகாணப் பகுதியில் அமெரிக்க ராணுவத்தினர் நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தினர். விமானத்திலிருந்து ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் நாட்டில் தலிபான் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த மவுலானா பஸ்லுல்லா இறந்தார். கிழக்கு குனார் மாகாணம் தங்கம் மாவட்டத்திலுள்ள நுர் குல் கலாய் கிராமத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. பஸ்லுல்லாவுடன், மேலும் 4 தெஹ்ரீன்-இ-தலிபான் (டிடிபி) தீவிரவாதப் பிரிவு கமாண்டர்களும் உயிரிழந்தனர் என்று வாய்ஸ் ஆப் அமெரிக்கா ரேடியோ தெரிவித்துள்ளது.
பஸ்லுல்லாவும், அவருடன் கிராமத்து மக்களும் இப்தார் நோன்பு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அமெரிக்க விமானம் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் இறந்த மவுலானா பஸ்லுல்லா, அப்பகுதி மக்களால் முல்லா ரேடியோ என்று அழைக்கப்பட்டார். ரேடியோ மூலம் பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில், தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் சொற்பொழிவுகளை ஆற்றி வந்துள்ளார்.
மேலும் பாகிஸ்தானில் பெண் உரிமைகள், பெண் கல்விக்காக போராடிய மலாலா யூசுப்சாயை இவர்தான் துப்பாக்கியால் சுட்டார் என்று நம்பப்படுகிறது. பாகிஸ்தான் நாடு முழுமைக்கும் தலிபான் தீவிரவாத இயக்கத்தினரை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கமாண்டராக இருந்தவர் இந்த மவுலானா பஸ்லுல்லா.
இத்தகவலை அமெரிக்கா ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தத் தாக்குதலில் பஸ்லுல்லா இறந்தாரா இல்லையா என்பது குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்க ராணுவத் தலைமையக அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
2012-ல் முதன்முதலாக பஸ்லுல்லா மீது அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்தினர். அந்தத் தாக்குதலில் அவர் இறந்ததாக அப்போது அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் தப்பிவிட்டதாக பின்னர் தெரியவந்தது. இதேபோல அவர் மீது மூன்று முறை தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அவர் தப்பிவிட்டார்.
இவரது தலைக்கு அமெரிக்க ராணுவம் ரூ.34 கோடி பரிசுத்தொகையை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. – பிடிஐ