குருவுக்காக பெருவிரல் கொடுத்தான் ஏகலைவன்; இன்று குருவையே ‘வெட்டிவிட்டார்’ மோடி: ராகுல் காந்தி கிண்டல்
குரு கேட்டதற்காக அன்று ஏகலைவன் தன் பெருவிரலை வெட்டிக்கொடுத்தான், ஆனால், இன்று பிரதமர் மோடி பதவிக்கு வந்தவுடன், தனது குருவையே (அத்வானி) வெட்டிவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
மூத்த தலைவர்களுக்கு அவமானம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக மஹாராஷ்டிரா மாநிலத்துக்கு வந்திருந்தார். அப்போது, காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் நேற்று ராகுல் காந்தி பேசுகையில், ‘‘பிரதமர் மோடிக்கு மூத்த தலைவர் எல்.கே.அத்வானிதான் அரசியல் குரு. ஆனால், நான் பார்த்த பல்வேறு நிகழ்ச்சிகளில் தனது குருவுக்குப் பிரதமர் மோடி மதிப்பளிப்பதில்லை. அத்வானியின் நிலையைப் பார்த்து இன்று நான் மிகவும் வேதனைப்படுகிறேன். பிரதமர் மோடியைக் காட்டிலும் அத்வானி மீது காங்கிரஸ் கட்சி அதிகமான மதிப்பு வைத்துள்ளது.
அதனால்தான், முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய் எயிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டதும் உடனடியாக நான் சென்று பார்த்து, மருத்துவர்களிடம் உடல்நலம் கேட்டறிந்தேன். வாஜ்பாய் அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறது. ஆனால், அவர் உடல்நலம் குன்றியவுடன் முதலில் நான்தான் சென்று பார்த்தேன். இதுதான் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம். எதிர்க்கட்சியினரையும் மதித்து நடப்போம்’’ என்று பேசி இருந்தார்.
வீடியோ வெளியீடு
இதோடு மட்டுமல்லாமல், ட்விட்டரில் ராகுல்காந்தி ஒரு வீடியோவையும் வெளியிட்டுக் கிண்டலாக பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதும் மோடி அத்வானி காலில் விழுந்து ஆசி பெறுவதும், பிரதமராகப் பொறுப்பு ஏற்றதும் அவர் காலில் விழுந்து வணங்குவதும், அதன்பின் 2018-ம் ஆண்டு பிரதமர் மோடி, திரிபுராவில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்ட மூத்த தலைவர் அத்வானி வணக்கம் செலுத்தியபின்பும், அதைக் கண்டுகொள்ளாமல் அவரைக் கடந்து சென்று மற்ற தலைவர்களை சந்தித்த காட்சியும் இடம்பெற்று இருந்தது.
ராகுல் காந்தி ட்விட்டரில் கூறுகையில், ‘‘அன்று ஏகலைவன் தனது குரு கேட்டார் என்பதற்காகத் தனது பெருவிரலை வெட்டிக்கொடுத்தான். ஆனால், இன்று பாஜவில் மோடி அதிகாரத்துக்கு வந்தவுடன் குருவையே வெட்டிவிட்டுச் சென்றுவிட்டார். இன்று மூத்த தலைவர்கள் வாஜ்பாய், எல்.கே.அத்வானி, ஜஸ்வந்த் சிங் ஆகியோரும், அவர்களின் குடும்பத்தினரும் மோடியால் அவமானப்படுத்தப்படுகிறார்கள். மூத்த தலைவர்களை இப்படித்தான் அவமானப்படுத்துவதா? இந்தியக் கலாச்சாரத்தை பிரதமர் மோடி பாதுகாக்கும் வழி இதுதானா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கண்டனம்
இதற்கு பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பாஜக எம்.பி. அனில் பலுனி கூறுகையில், ‘‘பாஜகவினர் மூத்த தலைவர்களை எப்படி மதித்து நடக்க வேண்டும் என்று அறிவுரை கூற ராகுல் காந்தி முயற்சித்து வருகிறார். முதலில் காங்கிரஸ் கட்சி தங்களுடைய கட்சியின் மூத்த தலைவர்களை எப்படி மதித்து நடக்கிறது என்பதையும், மதிப்புடன் நடத்த வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம். முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் தலைவர் சீதாராம் கேசரி ஆகியோர் காங்கிரஸ் கூட்டங்களில் சோனியா காந்தியால் எப்படி அவமானப்பட்டார்கள் என்பது தெரியும். நாட்டின் கலாச்சாரத்தை ஒரு குடும்பம் அவமானப்படுத்தியும், கிண்டல் செய்தும் வருகிறது. முதலில் ஒவ்வொருவரும் தங்களின் சுய ஒழுக்கத்தை ஆய்வு செய்ய வேண்டும்’’ எனத் தெரிவித்தார்