EBM News Tamil
Leading News Portal in Tamil

பண மதிப்பிழப்பால் பொருளாதாரத்தில் சரிவு : சிதம்பரம்

புதுடில்லி : டில்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், வேண்டுமென்றே உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
2014 மே – ஜூன் மாதத்திற்கு பிறகு எவ்வித காரணமும் இன்றி விலை உயர்த்தப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பால் நாட்டின் பொருளாதாரம் நலிந்துள்ளது. இது வாடிக்கையாளர்களை கசக்கி பிழியும் நடவடிக்கையே அன்றி வேறு ஒன்றும் இல்லை. இணைச் செயலாளர் பதவி நியமனம் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது.
விலை ஏற்றம் செயற்கை தனமானது என்ற எண்ணம் எழுந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்துள்ளது. ஏர் இந்தியா நிறுவன பங்குகள் விற்பனையில் கூட தெளிவான முடிவு இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு மத்திய அரசின் வரிகளே காரணம். தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி.,யின் கீழ் கொண்டு வந்தால் விலை குறையும். பா.ஜ., தான் மத்தியிலும், பெரும்பாலான மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ளது. அப்படி இருக்கையில் அவர்கள் மாநில அரசுகளுக்கு குறை கூறுவது ஏன்? அவர்களிடம் பெரும்பான்மை உள்ளது. அவர்கள் செய்ய வேண்டியது தானே. பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. சமீபத்தில் ரெப்போ வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டதற்கும் காரணம் தெரியவில்லை. இதனால் வட்டிவிகிதம் உயரும். இதனால் வாடிக்கையாளர்களும், உற்பத்தியாளர்களும் தான் பாதிக்கப்படுவார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.