காங்., இப்தார் விருந்து : பிரணாப், அன்சாரி புறக்கணிப்பு
புதுடில்லி : காங்., சார்பில் ஜூன் 13 ம் தேதி டில்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஓட்டலில் இப்தார் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. கட்சி தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பிறகு காங்., சார்பில் நடத்தப்படும் முதல் இப்தார் நிகழ்ச்சி இது.
கடந்த 2 ஆண்டுகளாக காங்., சார்பில் இப்தார் விருந்து அளிக்கப்படவில்லை. இதற்கு முன் 2015 ல் சோனியா தலைவராக இருந்த போது இப்தார் விருந்து அளிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்படும் இப்தார் நிகழ்ச்சி என்பதால், இதனை எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சியாகவும் பயன்படுத்திக் கொள்ள காங்., திட்டமிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒருங்கிணைத்து நடத்த உள்ள இந்த இப்தார் நிகழ்ச்சிக்கு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
ஆர்எஸ்எஸ் விழாவில் காங்.,கின் எதிர்ப்பை மீறி பிரணாப் கலந்து கொண்ட ஓரிரு நாட்களில் காங்., அளிக்கும் இப்தார் விருந்திற்கு பிரணாப் புறக்கணிக்கப்பட்டிருப்பது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.