EBM News Tamil
Leading News Portal in Tamil

நீட் தேர்வு தோல்வியால் 8வது மாடியில் இருந்து குதித்து டெல்லி மாணவர் தற்கொலை

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததால், டெல்லியில் 8வது மாடியிலிருந்து குதித்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
கடந்தாண்டு வெளியான நீட் தேர்வு முடிவில் தோல்வி அடைந்ததால், அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடப்பாண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று நாடு முழுவதும் வெளியானது. தேர்வில் தோல்வி அடைந்ததால் தமிழகத்தில் விழுப்புரத்தை சேர்ந்த மாணவி பிரதீபா, விஷம் அறிந்து தற்கொலை செய்து கொண்டார்.
அனிதாவின் மரணத்திலிருந்தே வெளிவராத தமிழகம், தற்போது விழுப்புரம் மாணவி பிரதீபா தற்கொலைக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறது. இதில் மேலும் ஒரு அதிர்ச்சியாக டெல்லியை சேர்ந்த மாணவர் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
டெல்லியை சேர்ந்த 19 வயது இளைஞரான பிரணவ் மேகந்திரதா, மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன், நீட் தேர்விற்கு தயாராகி வந்தார். கடந்தாண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்த அவர், இந்தாண்டு மீண்டும் அந்த தேர்வை எழுதியிருந்தார்.
நேற்று நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இரண்டாவது முறையும் பிரணவ் மேகந்திரதா தோல்வி அடைந்தார். இதனால் அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
பிறகு, அவர் வசித்து வந்த வீட்டின் 8வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி டெல்லி துவராகா வடக்கு பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவர் பிரணவ் மேகந்திரதாவின் உடலை கைப்பற்றி, பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவர் சாகும் முன்பு எழுதி வைத்த தற்கொலை கடித்ததை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
அதில், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததை குறிப்பிட்டுள்ள மாணவர் பிரணவ் மேகந்திரதா, தனது தோல்விக்கு பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.