EBM News Tamil
Leading News Portal in Tamil

எஸ்.வி சேகருக்கு முன் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு: கைது செய்ய விதிக்கப்பட்ட தடையும் நீக்கம்

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக பதிவிட்ட வழக்கில் எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கைது செய்ய விதித்த தடையையும் நீக்கியது.
ஆளுநர் பெண் பத்திரிகையாளரை கன்னத்தில் தட்டிய விவகாரம் பெரிதானதை அடுத்து நடிகர் எஸ்.வி.சேகர் அந்த பெண் பத்திரிகையாளர் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவதூறாக பதிவிட்டிருந்தார். மேலும் ஊடகங்களில் பணியாற்றும் பெண்கள் பதவி உயர்வுக்காக மேலதிகாரிகளை அனுசரித்து போகும் நிலை உள்ளதாகவும் பதிவிட்டிருந்தது தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு அலையை உருவாக்கியது.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையரிடம் தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எஸ்.வி.சேகர் மீது பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் தமிழகம் முழுதும் பல்வேறு காவல் நிலையங்களில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் எஸ்.வி.சேகர் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் அவர் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார். அவரை ஏன் கைது செய்யவில்லை என காவல்துறை மீது அதிருப்தியும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து எஸ்.வி.சேகர் உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜூன் 1 வரை எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதித்திருந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது எஸ்.வி. சேகருக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தஉச்சநீதிமன்றம், அவரை கைது செய்ய விதித்திருந்த தடையை நீக்கியும் உத்தரவு பிறப்பித்தது.
அரசு தரப்பில் எஸ்.வி.சேகர் மீது சார்ஜ் ஷீட் ரெடியாகி விட்டது என்று தெரிவித்தனர். இதையடுத்து, எஸ்.வி.சேகரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். எஸ்வி சேகருக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டதால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.