EBM News Tamil
Leading News Portal in Tamil

பாம்பன் பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

பாம்பன் பாலத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் மண்டபத்தில் ஒரு மணி நேரமாக ரயில் நிறுத்தம்!
ராமேஸ்வரம் பாம்பன் பாலத்திற்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரம் சுற்றுலாத்தளம் என்பதால், எப்போதுமே பாம்பன் பாலம் பரபரப்பாகவே காணப்படும். சுற்றுலாப் பயணிகள் அந்த பாலத்தில் வாகனத்தை நிறுத்தி கடலை ரசிப்பது வருவது வழக்கம். இந்நிலையில், பாம்பன் பாலத்திற்கு இன்று மர்ம நபர் ஒருவர் திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட அந்த மர்ம நபர் பாம்பன் பாலத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என கூறியுள்ளார். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து ராமநாதபுரம் மாவட்டம் போலீஸ் எஸ்பி ஓம் பிரகாஷ் மீனாவின் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி மகேஷ் மற்றும் போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் பாம்பன் பாலத்தில் சோதனையை மேற்கொண்டனர்.
மேலும், ரயில் பாலம் மற்றும் சாலை பாலம் ஆகிய இரண்டிலும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மண்டபத்தில் ஒரு மணி நேரமாக ரயில் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது, நாமக்கல்லை சேர்ந்த மனநலம் பாதித்த சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டலால் திருச்சி – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் தாமதமானது.