EBM News Tamil
Leading News Portal in Tamil

மத்திய பட்ஜெட்டில் முதியோருக்கு சலுகை: நிதியமைச்சருக்கு தன்னார்வ அமைப்பு கடிதம் | Voluntary organization letter to the Finance Minister


மத்திய பட்ஜெட்டில் முதியோர் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என ‘ஏஜ்வெல் பவுன்டேஷன்’ என்ற தன்னார்வ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அந்த அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாட்டின் மக்கள் தொகையில் 32 கோடிக்கும் மேற்பட்டோர் (சுமார் 20 சதவீதம் பேர்) 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்கள் கண்ணியமாகவும் நலமுடனும் வாழ்வதை உறுதி செய்திட சுகாதாரப் பராமரிப்பு, நிதிப் பாதுகாப்பு மற்றும் சமூக ஆதரவு அமைப்புகளில் உடனடி மற்றும் வலுவான கொள்கை சீர்திருத்தங்கள் செய்திட வேண்டும். முதியோரை பராமரிக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும். மூத்த குடிமக்கள் பாதயாத்திரை செல்ல நிதியுதவி, மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு தள்ளுபடி அட்டை வழங்க வேண்டும்.

முதியோருக்கான டயப்பர்கள், சக்கர நாற்காலிகள், சுகாதார உபகரணங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விகிதங்களை குறைக்க வேண்டும். அதிகரித்து வரும் மருத்துவ மற்றும் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க முதியோர் ஓய்வூதியத் திட்டங்களை விரிவுபடுத்துதல், சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்தல் மற்றும் ஓய்வூதியத் தொகையை அதிகரித்தல் போன்ற அறிவிப்புகளை வெளியிட வேண்டும். பிரதமர் மக்கள் ஆரோக்கிய திட்டத்துக்கு தகுதி பெறும் வயதை 70-ல் இருந்து 60 ஆக குறைக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

2025-26-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.