பணக்காரர்களுக்கான கடன்கள் தள்ளுபடியை தடுக்க சட்டம்: பிரதமர் மோடிக்கு கேஜ்ரிவால் வலியுறுத்தல் | Arvind Kejriwal urges PM Narendra Modi to enact law banning loan waivers for billionaires
புதுடெல்லி: பெரும் செல்வந்தர்களுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதை தடுக்கும் வகையில் நாடுதழுவிய அளவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அரவிந்த் கேஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் கேஜ்ரிவால் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த போது, “ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள பெருநிறுவனங்களின் கடன்களைத் தள்ளுபடி செய்வதன் மூலம் மத்திய அரசு பணக்காரர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. இத்தகைய நடைமுறைகள் சாமானியர்கள் மீது அதிகப்படியான வரிச்சுமையைத் திணிக்கிறது.
பணக்காரர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் அதேவேளையில், சாமானிய மக்கள் தங்களின் வருமானத்தில் பாதியை வரியாக செலுத்துகின்றனர். மத்திய அரசு ஏன் வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்ற சாமானியர்களுக்கான கடன்களை தள்ளுபடி செய்யவில்லை?
பணக்காரர்களுக்கான கடன் தள்ளுபடிகளை நிறுத்துவது, அரசுக்கு வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி-யை பாதியாக குறைக்கவும், வரி வருமான வரம்பை இரட்டிப்பாக்கவும், அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரிகளை நீக்கவும் வழிவகை செய்யும். பணக்கார்களுக்கான கடன் தள்ளுபடி என்பது மிகப்பெரிய ஊழல், அதனை நிறுத்துவதற்கான நேரம் இது.” என்று தெரிவித்தார்.
டெல்லி பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கேஜ்ரிவால் பணக்காரர்களின் கடன் தள்ளுபடிக்கு எதிராக பேசியிருப்பது கவனிக்கத்தக்கது. டெல்லியில் பிப்ரவரி 5-ம் தேதி வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. பதிவான வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்படுகின்றன.
இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மி கட்சியும், இழந்த அதிகாரத்தை மீண்டும் பிடிக்க காங்கிரஸ், பாஜக கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன.