உ.பி.யில் மத நிகழ்வில் தற்காலிக மேடை இடிந்து விழுந்து 5 பேர் பலி; பலர் காயம் | 5 dead, several injured as makeshift stage collapses at Nirvana Laddu Parv in Baghpat
பாக்பத்: உத்தரப் பிரதேசத்தின் பாக்பத்தில் ஜைன சமய விழாவில் தற்காலிக மேடை இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர். ஜைன மத சீடர்கள், காவலர்கள் உட்பட பலர் காயமடைந்தனர்.
பாக்பத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த இந்த சம்பவத்தால் அங்கு குழப்பமும், பதற்றமும் ஏற்பட்டது. சம்பவத்தில் பல பக்தர்கள் காயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. தற்காலிக மேடை இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக தேவையான நிவாரண உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார்.
பாக்பத் மாவட்ட ஆட்சித்தலைவர் அஸ்மிதா லால் கூறுகையில், “பரவுத்தில் ஜைன மதத்தினரின் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மரமேடை இடிந்து விழுந்து 40 பேர் காயமடைந்தனர். அவர்களில் மருத்துவ சிகிச்சைக்கு பின்பு 20 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். 20 சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்பித் விஜய்வர்கியா கூறுகையில், “பரவுத்தில் ஜைன சமூகத்தின் லட்டு மோட்சவ் விழாவில் ஒரு மக்கான் (தற்காலிக மேடை) இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. 2 -3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.” என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், யோகி ஆதித்யநாத் அரசை சாடியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாஜக யோகி அரசு மதத்தின் பெயரால் ஒரு காட்சியை உருவாக்குகிறது, ஆனால் மக்களுக்கு எந்த பாதுகாப்பும் வசதிகளும் கிடைக்கவில்லை.
கூட்டத்தை கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள், வருகை தரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வசதிகள் செய்யப்படவில்லை அல்லது அதற்கான முன்னேற்பாடுகள் கூட செய்யப்படவில்லை. அதனால் தான் மத நிகழ்வுகளில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. உயிர்கள் பலியாகின்றன.
ஊழலில் மட்டுமே ஈடுபட்டுள்ள யோகி, பாஜக அரசு இதனையெல்லாம் ஏன் பார்க்க மறுக்கிறது?. அவர்கள் வெட்கமின்றி ஒப்பாரி வைத்து கூச்சலிடுகிறார்கள், ஆனால் அவர்களின் முயற்சி வீணாகவே முடிகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
திருப்பதி கூட்ட நெரிசல் வழக்கு: முன்னதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் இந்தியாவில் மிகவும் பரபரப்பாக இருக்கும், பணக்கார கோயிலான ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமார் ஆறு பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர். கோயிலில் இலவச தரிசனத்துக்கான அனுமதிச் சீட்டு வாங்க ஆயிரக்கணக்கான பேர் ஒன்று கூடியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது.