என் உடலில் இந்திய டிஎன்ஏ உள்ளது: இந்தோனேசிய அதிபர் சுபியாண்டோ கருத்து | I have Indian DNA in my body Indonesian President
புதுடெல்லி: என் உடலில் இந்திய டிஎன்ஏ உள்ளது என்ற இந்தோனேசிய அதிபர் சுபியாண்டோவின் கருத்தைக்கேட்ட குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாய்விட்டு சிரித்தனர்.
டெல்லியில் நாட்டின் 76-வது குடியரசு தின விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதில் இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முன்னதாக, 25-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், இந்தோனேசிய அதிபர் சுபியாண்டோ பேசும்போது, “சில வாரங்களுக்கு முன்பு நான் மரபணு சோதனை செய்து கொண்டேன். அந்த சோதனையில் எனக்கு இந்திய டிஎன்ஏ இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இந்திய இசையைக் கேட்கும்போதெல்லாம் நான் நடனமாட தொடங்கி விடுவேன் என்பது அனைவருக்கும் தெரியும்” என்றார். இதைக் கேட்டதும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாய்விட்டு சிரித்தனர்.
மேலும் சுபியாண்டோ பேசியதாவது: இந்தியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே நீண்ட, பழமையான வரலாறு உள்ளது. இரு நாடுகளுக்கிடையே பண்டைக்கால நாகரீக தொடர்பும் உள்ளது. நம்முடைய மொழியின் முக்கியமான பகுதிகள் சம்ஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான். இந்தோனேசியாவில் உள்ள பலரின் பெயர்கள் சம்ஸ்கிருத பெயர்கள்தான். எங்களுடைய அன்றாட வாழ்க்கையிலும் இந்திய பழங்கால நாகரீகத்தின் தாக்கம் உள்ளது. இதுவும் நம்முடைய மரபியலின் ஒரு பகுதிதான் என கருதுகிறேன்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை சிறப்பாக உள்ளது. குறிப்பாக, வறுமையை ஒழிக்கவும் பின்தங்கிய சமூகத்தினரை மேம்படுத்தவும் அவர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இது எனக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. இந்திய வருகை மூலம் நான் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.
இந்தியாவுக்கு வந்ததில் நான் பெருமை கொள்கிறேன். நான் ஒரு தொழில்முறை அரசியல்வாதியோ அல்லது ராஜதந்திரியோ அல்ல. நான் இதயத்திலிருந்து பேசுகிறேன். வரும் காலங்களில் இந்திய மக்கள் அமைதி, வளம் பெற்று மேன்மை அடைய வாழ்த்துகிறேன். இரு நாடுகளுக்கிடையிலான நெருங்கிய நட்பு தொடரும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.