கும்பமேளாவில் பாவத்தை போக்க புனித நீராட வந்த நீண்டகால தலைமறைவு குற்றவாளி கைது | absconding criminal arrested who came Kumbh Mela to wash away sins
புதுடெல்லி: மகா கும்பமேளாவில் தன் பாவத்தை போக்கிட புனித நீராட வந்த நீண்டகால தலைமறைவு குற்றவாளியை போலீஸார் அதிரடியாக சுற்றிவளைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த நிலையில், தான் செய்த பாவத்தை போக்கிட ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவு குற்றவாளியாக இருந்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த பிரவேஷ் யாதவ் என்பவரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
இதுகுறித்து காவல் துறை கண்காணிப்பாளர் பதோக அபிமன்யூ மங்லிக் கூறும்போது: கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை 29-ல் தேசிய நெடுஞ்சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் இருந்து பிஹாருக்கு கலப்பட மதுபானம் கடத்திவந்த போது பிரதீப் யாதவ் மற்றும் ராஜ் டோமோலியா ஆகிய இருவரும் உஞ்ச் போலீஸாரிடம் கையும் களவுமாக பிடிபட்டனர். ஆனால், இவர்களில் தப்பியோடிய பிரதீப் யாதவ் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிடிபடாமல் இருந்து வந்தார்.
மகா கும்பமேளாவில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால் மகா கும்பமேளாவில் புனித நீராட வந்த பிரதீப் தற்போது வசமாக சிக்கியுள்ளார். இவர் உட்பட ஆல்வார் பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் மீது கலால் சட்டம், குண்டர் சட்டம் போன்ற பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அபிமன்யூ தெரிவித்தார்.