EBM News Tamil
Leading News Portal in Tamil

ஜம்மு காஷ்மீரில் குடியரசு தினவிழா நடைபெறும் இடத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் | Bomb threat prompts search at Republic Day venue in Jammu and Kashmir, proved to be hoax


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் குடியரசு தினவிழா தொடங்குவதற்கு முன்பு, வந்த வெடிகுண்டு மிரட்டலால், விழா நடைபெறும் இடத்தில் முழுமையான சோதனை நடத்தப்பட்டதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாரிகள் தெரிவித்தனர். சனிக்கிழமை பின்னிரவில் மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட மிரட்டல், வெறும் புரளி என்று நிரூபிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் முக்கியமான குடியரசு தினவிழா நடக்கும் எம்.ஏ. மைதானத்தில், துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, தேசியக் கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்க இருந்தார். முதல்வர் உமர் அப்துல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருந்தார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “உயர் கல்வி செயலாளர் மற்றும் உயர்கல்வி இயக்குனர் உட்பட பல்வேறு துறைகளின் மின்னஞ்சல் முகவரிக்கு ‘டிசே லிஷ்’ என்ற பயனர் முகவரியில் இருந்து சனிக்கிழமை இரவு மிரடல் செய்தி வந்தது.

மின்னஞ்சலைத் தொடர்ந்து விழா நடக்க இருந்த மைதானத்தில், உயர் போலீஸ் அதிகாரிகளின் முன்னிலையில் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவின் பல்வேறு குழுக்கள் இரவு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டன. இந்தச் சோதனையில், சந்தேகப்படும் படியான எந்தப் பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்தனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.