EBM News Tamil
Leading News Portal in Tamil

செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பிப். 10-ல் பிரான்ஸ் பயணம் | PM Modi to visit France on Feb 10 to attend ai Conference


புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் பிப்ரவரி 10-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயல் உச்சி மாநாடு வரும் பிப்ரவரி 10 மற்றும் 11-ம் தேதிகளில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் தலைவர், சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், கல்வியாளர்கள், அரசுசார் அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் நேற்று முன்தினம் கூறும்போது, “பிரான்ஸில் நடைபெறும் ஏஐ மாநாட்டில் பங்கேற்குமாறு அந்நாட்டு அதிபர் இம்மானுவல் மேக்ரான் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி வரும் 10-ம் தேதி பாரிஸ் செல்கிறார்” என்றார்.

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்ட பிரதமர் மோடி, பிரான்ஸ் நாட்டுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த மாநாட்டில் அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப் பங்கேற்றால் அவரை பிரதமர் மோடி தனியாக சந்தித்துப் பேசுவார் எனத் தெரிகிறது. இதுபோல பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.