உ.பி.யில் வீடியோ கேம் பெயரில் ரூ.70 கோடி சுருட்டல்: 30 பேர் கொண்ட சைபர் மோசடி கும்பலை சுற்றிவளைத்த தமிழர் இளமாறன் ஐபிஎஸ் | Ilamaran IPS rounded up cyber fraud gang
புதுடெல்லி: உ.பி. மாவ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசிப்பவர் வங்கிக் கணக்கில் ஒரே நாளில் ரூ.37 லட்சம் வரவு வைக்கப்பட்டது. இதில் சந்தேகப்பட்ட மத்திய பொருளாதார குற்றப்பிரிவினர், இதுகுறித்து விசாரிக்க மாவ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான (எஸ்.பி.) ஜி.இளமாறனுக்கு தகவல் அளித்தனர். தமிழ்நாட்டின் மன்னார்குடி கருவாச்சிக் கிராமத்தைச் சேர்ந்த தமிழர் இளமாறன், கால்நடை மருத்துவம் படித்த பின்னர் 2016-ல் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்.
இவரது விசாரணையில், வங்கிக் கணக்கை வைத்துள்ளவருக்கு மாதம் ரூ.10,000 கொடுத்து விட்டு வேறு யாரோ அதை பயன்படுத்தி வருவது தெரிந்தது. மேலும், அந்த கும்பல் கோரக்பூர் மாவட்டத்தில் இருந்து சைபர் குற்றங்களில் ஈடுபடுவதும், அடுக்குமாடி குடியிருப்பில் 3 வீடுகளில் தங்கியிருப்பதும் தெரியவந்தது.
ஒரே நேரத்தில் சுற்றிவளைப்பு: இதையடுத்து அவர்கள் ஒரே நேரத்தில் வீட்டில் இருக்கும் போது, இளமாறன் போலீஸ் படையுடன் சென்று கும்பலை சுற்றி வளைத்தார். திரைப்படங்களில் வரும் காட்சியை போல் 30 பேர் கொண்ட கும்பலை ஒரே நேரத்தில் சுற்றிவளைத்து போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரம்மி விளையாட்டுகளில் ஒன்றை சட்டவிரோதமாக நடத்தியது, வரி ஏய்ப்பு செய்தது, பொதுமக்களை ஏமாற்றியது தெரிய வந்தது. கடந்த 3 ஆண்டு களில் மட்டும் இந்த கும்பல் ரூ.70 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது. இந்த மோசடிக்காக கிராம மக்கள் சிலருக்கு மாதந்தோறும் பணம் கொடுத்து அவர்களுடைய வங்கி கணக்குகளை பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதமிழடம் எஸ்.பி. இளமாறன் கூறும்போது, “முதல் முறையாக விளையாடுபவர்களுக்கு ரூ.10,000 வரை வெற்றி பணமாக அளித்து இந்த கும்பல் தங்கள் வலைகளில் சிக்க வைக்கிறது. இக்கும்பலின் தலைவனை யாரும் நேரில் பார்த்தது இல்லை. அவர் வெளிநாடுகளில் இருந்து மோசடியில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன” என்றார்.