தேர்தல் ஆணையத்துக்கு பயப்படுவதில்லை: பாஜக மீது கேஜ்ரிவால் குற்றச்சாட்டு | Kejriwal accusation against BJP
தேர்தல் ஆணையம், சட்டத்துக்கு யாரும் பயப்படுவதில்லை, டெல்லியில் பணம், மது, தங்கச் சங்கிலிகளை வாக்காளர்களுக்கு பாஜக தலைவர்கள் பகிரங்கமாக பரிசாக வழங்கி வாக்கு சேகரித்து வருகின்றனர் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி சட்டப் பேரவைக்கு வரும் பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி நெருங்கி விட்டதால் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அர்விந்த் கேஜ்ரிவால் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டு கூறியுள்ளதாவது:
டெல்லி தேர்தலில் யாரும் சட்டத்தை மதிப்பதே இல்லை. சட்டத்துக்கோ, தலைமை தேர்தல் ஆணையத்துக்கோ பாஜக தலைவர்கள் பயப்படுவதே இல்லை. அவர்கள் வாக்காளர்களுக்கு பகிரங்கமாக பரிசுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். பணம், மது விநியோகம் சரளமாக நடக்கிறது. மேலும் வாக்காளர்களுக்கு தங்கச் சங்கிலிகள் உள்ளிட்ட பரிசுப்பொருட்களையும் பாஜக தலைவர்கள் வழங்கி வருகின்றனர்.
இவை அனைத்தும் கடந்த ஒன்றரை மாத காலமாக போலீஸார் முன்னிலையே நடைபெற்று வருகிறது. வழக்கமாக தேர்தலுக்கு முதல் நாள் இரவுதான் இதுபோன்ற பணம், மது விநியோகங்கள் நடைபெறும். ஆனால், டெல்லியில் தற்போது கடந்த ஒன்றரை மாத காலமாகவே இதுபோன்ற பண விநியோகம் நடைபெற்று வருகிறது.
இதற்கு போலீஸார் முழு உடந்தையாக உள்ளனர். விநியோகத்துக்கு வைக்கப்பட்டு உள்ள பொருட்களுக்கு அவர்கள்தான் பாதுகாப்பாக இருக்கின்றனர். மேலும், பொருட்களை வாங்க வரும் வாக்காளர்களை ஒழுங்குபடுத்தி வரிசையில் அனுப்புகின்றனர். அதுமட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு மட்டுமே பொருட்கள் கிடைப்பதையும் அவர்கள் உறுதி செய்து வருகின்றனர்.
சட்டத்துக்கோ அல்லது தேர்தல் ஆணையத்துக்கோ அவர்கள் பயப்படுவதே இல்லை. இது ஜனநாயகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இந்தப் பணத்தை அந்தக் கட்சியினர் எங்கிருந்து கொண்டு வருகின்றனர்? வாக்காளர்களை விலைக்கு வாங்க அவர்களுக்கு எப்படி கோடிக்கணக்கில் பணம் கிடைக்கிறது?
மக்களிடமிருந்து ஊழல் மூலம் கொள்ளை அடித்த பணத்தைத்தான் அவர்கள் இவ்வாறு விநியோகம் செய்து வருகின்றனர் என்பதை வாக்காளர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இந்த நேரத்தில் வாக்காளர்களுக்கு நான் ஒன்றை கூறிக் கொள்கிறேன். அவர்கள் பணம், மது, தங்க நகை என எதைக் கொடுத்தாலும் அதை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், உங்கள் வாக்குகளை விற்று விடாதீர்கள். உங்கள் விலைமதிப்பற்ற வாக்குகளை ரூ.1,111 ரொக்கம், சேலை, போர்வை, ஒரு ஜோடி காலணிகளுக்காக விற்று விடாதீர்கள். உங்கள் வாக்குகள் விலைமதிப்பற்றவை.
நீங்கள் விரும்புபவர்களுக்கு வாக்களியுங்கள். உங்கள் வாக்குகளை வாங்க முயற்சிப்பவர்களுக்கு ஓட்டுப் போட வேண்டாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.