EBM News Tamil
Leading News Portal in Tamil

ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் மூலம் ஜன.29-ல் விண்ணில் ஏவப்படுகிறது என்விஎஸ்-02 செயற்கைக்கோள்! | NVS 02 satellite to be launched on Jan 29 through GSLV


சென்னை: நம் நாட்டின் வழிகாட்டுதல் பயன்பாட்டுக்கான என்விஎஸ்-02 செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் மூலம் ஜனவரி 29-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.

அமெரிக்காவுக்கு ‘ஜிபிஎஸ்’ போல, நம்நாட்டில் தரை, கடல் மற்றும் வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு’ (ஐஆர்என்எஸ்எஸ்) உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. இதற்காக ஐஆர்என்எஸ்எஸ் வரிசையில் 2013 முதல் 2018-ம் ஆண்டு வரையான காலக்கட்டங்களில் 8 வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இதன்மூலம் இந்தியாவுக்கு பிரத்யேக வழிகாட்டியாக நாவிக் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த நாவிக் மூலம்தான் நமது நாட்டின் கண்காணிப்பு பணிகள் இப்போது சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன.

இதையடுத்து, ஐஆர்என்எஸ்எஸ் திட்டத்தில் தற்போதைய காலத்துக்கேற்ப மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதன்படி ஐஆர்என்எஸ்எஸ் 1ஜி-வுக்கு மாற்றாக என்விஎஸ்-01 செயற்கைக்கோள் 2023 மே 29-ல் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. தொடர்ந்து தற்போது ஐஆர்என்எஸ்எஸ் 1இ செயற்கைக்கோளுக்கு மாற்றாக அதிநவீன என்விஎஸ்-02 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இந்த செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகேட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜனவரி 29-ம் தேதி விண்ணில் அதிகாலையில் ஏவப்பட உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். என்விஎஸ் செயற்கைக்கோள் 2,250 கிலோ எடை உடையது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இதில் எல் 1, எல் 5, மற்றும் எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டர்கள், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அணுக் கடிகாரம் உட்பட்ட பல்வேறு மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இடம் பெற்றுள்ளன. இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும். பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களை தெரிவிக்கும் என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.